திமுக ஆட்சியின் நாட்கள் எண்ணப்பட்டு வருகின்றன. தேர்தல் எப்போது நடத்தப்பட்டாலும் படுதோல்வி உறுதி - எச்சரித்த டாக்டர் இராமதாஸ்!
PMK Ramadoss Condemn to DMK Govt Mk Stalin Govt
பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்து தெரிவித்தாவது, "தமிழ்நாட்டு காவல்துறை ஒரு காலத்தில் ஸ்காட்லாந்து யார்டு காவல்துறைக்கு இணையானதாக போற்றப்பட்டது. ஆனால், இப்போது தமிழக காவல்துறையின் செயல்பாடுகள் முற்றிலுமாக முடங்கி விட்டன. தமிழ்நாட்டை உலுக்கிய பல வழக்குகளில் இன்று வரை துப்பு துலக்கப்படவில்லை. காவல்துறையின் புலனாய்வுத் திறன் மழுங்கி விட்டது என்பதற்கு இது தான் எடுத்துக்காட்டு.
வேங்கைவயலில் பட்டியலினத்தவரின் பயன்பாட்டுக்கான மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனிதக்கழிவுகள் கலக்கப்பட்டு இரு ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது. ஆனால், அந்த வழக்கில் இதுவரை ஒருவர் கூட கைது செய்யப்படவில்லை; பாதிக்கப்பட்டோருக்கு நீதி கிடைக்கவில்லை.
2023ஆம் ஆண்டு மே மாதம் 21ஆம் தேதி தஞ்சாவூரில் உள்ள அரசு மதுக்கடை குடிப்பகத்தில் மது குடித்த குப்புசாமி, விவேக் என்ற இருவர் துடிதுடித்து உயிரிழந்தனர். விசாரணையில் அவர்கள் குடித்த மதுவில் சயனைடு கலந்திருந்தது தெரியவந்தது. அரசு மதுக்கடையில் விற்கப்பட்ட மதுவில் சயனைடு கலந்திருந்தது எப்படி? என்பதைக் கண்டறிய சிபிசிஐடி விசாரணைக்கு ஆணை பிறப்பிக்கப்பட்டது. ஆனால், அதன்பின் ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாகியும் விசாரணையில் இதுவரை எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை; குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை.
திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் திசையன்விளை ஜெயக்குமார் கடந்த மே மாதம் 4ஆம் தேதி கொடூரமான முறையில் உடல் எரித்து படுகொலை செய்யப்பட்டார். அதன்பின் 9 மாதங்களாகி விட்டன. அவரை கொலை செய்தவர்கள் யார்? என்பதை காவல்துறை இன்னும் கண்டுபிடிக்கவில்லை. ஒரு தேசியக் கட்சியின் மாவட்டத் தலைவரின் கொலை வழக்கின் விசாரணையே இப்படி நடந்தால், சாதாரணமானவர்களுக்கு என்ன பாதுகாப்பு?
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த சேமலைக்கவுண்டன் பாளையம் கிராமத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் கடந்த நவம்பர் 28ஆம் தேதி கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டு, இன்றுடன் 35 நாட்களாகிவிட்டன. ஆனால், அந்த வழக்கில் இன்னும் துப்பு துலக்க முடியவில்லை. குற்றவாளிகளைப் பிடிக்க 14 தனிப்படைகள் அமைக்கப் பட்டும் இதுவரையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. தமிழக காவல்துறை முற்றிலுமாக செயலிழந்து கிடக்கிறது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் திம்மாவரம் கிராமத்தைச் சேர்ந்த நிர்மலா என்ற பெண் கடந்த 26ஆம் தேதி பால் விற்பனை செய்து விட்டு வீடு திரும்பும் போது கொடியவர்கள் சிலரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து ஒரு வாரமாகியும் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியவில்லை.
காவல்துறையின் இந்த அவல நிலைக்கு காரணம் அதன் செயல்பாடுகள் சிதைந்து விட்டது தான். காவல்துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர், உள்துறை செயலாளர், காவல்துறை தலைமை இயக்குனர் ஆகியோர் தான் காவல்துறையின் செயல்பாடுகளுக்கு பொறுப்பானவர்கள் ஆவர். ஆனால், இந்த மூவரின் கட்டுப்பாட்டிலும் காவல்துறை இல்லை என்பது தான் மறுக்க முடியாத உண்மை. காவல்துறையில் பல குழுக்கள் உள்ளன. அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு அதிகார மையத்தை பிடித்து வைத்துக் கொண்டு தங்களின் தேவைகளை நிறைவேற்றிக் கொள்கின்றனர். காவல்துறையில் செயல்படாத அதிகாரிகளை, தவறு செய்யும் அதிகாரிகளை தட்டிக் கேட்க யாரும் இல்லை.
காவல்துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர், குறைந்தது இரு வாரங்களுக்கு ஒருமுறை சட்டம் & ஒழுங்கு குறித்து ஆய்வு நடத்த வேண்டும். ஆனால், கடந்த ஜூலை மாதம், அதன் பின் திசம்பர் மாதம் என 6 மாதங்களுக்கு ஒருமுறை தான், அதுவும் காவல்துறை உயரதிகாரிகளை மட்டும் அழைத்து தான் முதலமைச்சர் கலந்தாய்வு நடத்தியுள்ளார். இனியாவது சட்டம் - ஒழுங்கை பாதுகாக்கும் விஷயத்தில் முதலமைச்சர் கூடுதல் அக்கறை காட்ட வேண்டும்; காவல்துறையை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும்" என்று மருத்துவர் இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், எதிர்க்கட்சிகள் போராட்டம் என்று அறிவித்தாலே அவர்களை முன்னெச்சரிக்கையாக கைது செய்து செய்து போராட்டத்தை முடக்குவதில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
திமுக அரசின் இந்த சர்வாதிகாரத்தனமும், அடக்குமுறையும் அதன் அச்சத்தை அப்பட்டமாக அம்பலப்படுத்துகின்றன. மக்கள் நலனையும், சட்டம் & ஒழுங்கையும் காப்பதில் தோல்வியடைந்து விட்ட திமுக அரசு, அதை மக்கள் அறிந்து கொண்டால் வரும் தேர்தலில் படுதோல்வியை பரிசளிப்பார்கள் என்ற அச்சம் காரணமாகத் தான் இத்தகைய அத்துமீறல்களை மேற்கொண்டு வருகிறது.
எதிர்க்கட்சிகளை அடக்குவதன் மூலம் எதையும் சாதிக்க முடியாது. திராவிட மாடல் அரசின் நாட்கள் எண்ணப்பட்டு வருகின்றன. சட்டப்பேரவைத் தேர்தல் எப்போது நடத்தப் பட்டாலும் அதில் திமுக அரசு கண்டிப்பாக படுதோல்வி அடையும். இது உறுதி" என்றும் மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார்.
English Summary
PMK Ramadoss Condemn to DMK Govt Mk Stalin Govt