75,000 மாணவர்கள் பட்டமேற்படிப்பில் சேருவதில் பாதிப்பு! காரணம் என்ன? முறைகேடா? சாட்டையை சுழற்றும் டாக்டர் இராமதாஸ்! - Seithipunal
Seithipunal


பெரியார் பல்கலைக்கழக தேர்வுகள் தாமதத்தால் 75,000 மாணவர்கள் பட்டமேற்படிப்பில் சேருவதில் பாதிப்பு ஏற்பட்டு உள்ளதாகவும், இதற்க்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில், "பெரியார் பல்கலைக்கழகம் மற்றும் அதனுடன் இணைந்த 115 கல்லூரிகளில் வரும் 17-ஆம் தேதி தொடங்குவதாக இருந்த பருவத் தேர்வுகள் 25-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன. 

ஜூன் 16-ஆம் தேதி நிறைவடையவுள்ள இத்தேர்வுகளின் முடிவுகள் ஜூலை மாத இறுதியில் தான் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெரியார் பல்கலைக்கழகத் தேர்வுகள் மே 17-ஆம் தேதி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்ததே மிகவும்  தாமதம் ஆகும். அத்தேர்வுகள் மேலும் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டிருப்பது மாணவர்களுக்கு சரி செய்ய முடியாத பாதிப்புகளை ஏற்படுத்தி விடும்.

சென்னை பல்கலைக்கழகம் உள்ளிட்ட பெரும்பான்மையான பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்புக்கான பருவத் தேர்வுகள் கடந்த மாதமே நிறைவடைந்து விட்டன. அவற்றின் முடிவுகள் இந்த மாத இறுதியில் வெளியிடப்பட்டு, அடுத்த மாதத் தொடக்கத்தில் பட்ட மேற்படிப்புக்கான மாணவர்  சேர்க்கை தொடங்கவுள்ளது. 

அதற்குள்ளாக  பெரியார் பல்கலைக்கழகத் தேர்வு முடிவுகள் வெளியாவதற்கு வாய்ப்புகள் இல்லை. அதனால்,  அந்த பல்கலைக்கழகத்திற்குட்பட்ட  கல்லூரிகளில் பயிலும் சுமார் 75,000 மாணவர்கள் பட்ட மேற்படிப்பில் சேருவதற்கு விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்படும்.

பெரியார் பல்கலைக்கழகத் தேர்வுகள் தாமதம் ஆவதற்கு பல்கலைக்கழக நிர்வாகத்தின் அலட்சியம் தான் காரணம் ஆகும். தேர்வுக்கான விடைத்தாள்கள் அச்சடிக்கும் பணிகள் இன்னும் நிறைவடையாதது தான் தேர்வுகள் தொடங்கப்படாததற்கு காரணம் ஆகும். தமிழகத்தின் பிற பல்கலைக்கழகங்கள் அரசு அச்சகங்களில் விடைத்தாள்களை அச்சிடுவது வழக்கம். 

ஜனவரி மாதத்திலேயே அதற்கான ஆணைகள் வழங்கபட்டு பிப்ரவரி மாத இறுதிக்குள் விடைத்தாள்கள் பல்கலைக்கழகங்களுக்கு வந்து விடும். ஆனால், பெரியார் பல்கலைக்கழகம் தனியார் அச்சகத்தில் விடைத்தாள்களை அச்சிடுவதும், அதற்கான ஆணைகள் மிகவும் தாமதமாக வழங்கப்பட்டதும் தான் தேர்வுகள் தாமதமாவதற்கு காரணம்.

பெரியார் பல்கலைக்கழக நிர்வாகத்தின் தவறு மற்றும் அலட்சியத்தால் மாணவர்கள் பாதிக்கப்படுவதை அனுமதிக்கக் கூடாது.  

விடைத்தாள்கள் அச்சடிப்பதற்காக ஆணைகள் தாமதமாக வழங்கப்பட்டது ஏன்? அதன் பின்னணியில் ஏதேனும் முறைகேடுகள் உள்ளனவா? என்பது குறித்து விசாரணை நடத்த தமிழக அரசு ஆணையிட வேண்டும்; தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பெரியார் பல்கலைக்கழக மாணவர்கள் பட்ட மேற்படிப்பில் சேருவதற்கு வசதியாக மாணவர் சேர்க்கைக்கான காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும்" என்று மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dr Ramadoss Condemn TO Periyar University Exam Issue may 2023


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->