மீண்டும் அரங்கேறிய கொடூரம், கோட்டைவிட்ட தமிழக அரசு - கொந்தளிக்கும் டாக்டர் இராமதாஸ்!
Dr Ramadoss Condemn to TNGovt and Police for Vikravandi Sarayam Case
புதுச்சேரியிலிருந்து கள்ளச் சாராயம் கடத்தி வரப்படுவதை தடுப்பதில் தமிழக காவல்துறை தோல்வி என்று, பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த அவரின் அறிக்கையில், "புதுவை மாநிலம் மதகடிப்பட்டு பகுதியில் விற்பனை செய்யப்பட்ட கள்ளச் சாராயத்தை வாங்கி வந்து குடித்த விக்கிரவாண்டி தொகுதி மதுராபூரிகுடிசை கிராமத்தைச் சேர்ந்த 7 பேர் உடல்நலம் பாதிக்கப்பட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கிறது.
மதுராபூரிகுடிசை கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல், பிரபு ஆகிய இரு தொழிலாளர்கள் புதுவை மாநிலம் மதகடிப்பட்டு கிராமத்திற்குச் சென்று கள்ளச் சாராயத்தை வாங்கி வந்து தங்கள் ஊரைச் சேர்ந்த ராஜா, சுரேஷ் பாபு, பிரகாஷ், காளிங்கராஜ் உள்ளிட்டோருடன் சேர்ந்து குடித்துள்ளனர்.
அடுத்த சில மணி நேரங்களில் 7 பேருக்கும் கடுமையான உடல்நல பாதிப்பு ஏற்பட்ட நிலையில், அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். 2 நாள் தீவிர மருத்துவத்திற்குப் பிறகு 5 பேர் வீடு திரும்பிவிட்ட நிலையில், மீதமுள்ள இருவர் கல்லீரல் பாதி்ப்புக்காக தொடர்ந்து மருத்துவம் பெற்று வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து 66 பேர் உயிரிழந்த நிலையில், தமிழ்நாட்டில் கள்ளச் சாராயம் விற்கப்படுவதையும், கடத்தி வரப்படுவதையும் தடுக்க தமிழக காவல்துறை தவறிவிட்டது என்பதைபே இந்த நிகழ்வு காட்டுகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன் புதுவையில் இருந்து வாங்கிவரப்பட்ட கள்ளச் சாராயத்தைக் குடித்த முதியவர் ஒருவர் உயிரிழந்த நிலையில், தமிழக காவல்துறை விழித்துக் கொண்டு எல்லைப் பகுதியில் சோதனையை வலுப்படுத்தி இருந்தால், மதுராபூரிகுடிசை கள்ளச்சாராய பாதிப்புகளை தடுத்திருக்க முடியும்.
ஆனால், புதுவையில் இருந்து கொண்டுவரப்படும் கள்ளச் சாராயத்தைத் தடுக்க தமிழக காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்காததால்தான் 7 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கள்ளச்சாராயக் கடத்தலை தடுப்பதில் தமிழக அரசும், காவல்துறையும் முற்றிலுமாக தோல்வியடைந்துவிட்டன. தமிழக அரசு இனியாவது விழித்துக் கொண்டு புதுவை உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கு மது மற்றும் கள்ளச்சாராயம் கடத்தி வரப்படுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்" என்று மருத்துவர் இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
English Summary
Dr Ramadoss Condemn to TNGovt and Police for Vikravandi Sarayam Case