பேரழிவுக்கு தமிழக அரசே வழிகோலக் கூடாது - டாக்டர் இராமதாஸ் கண்டனம்! - Seithipunal
Seithipunal


சென்னை பூந்தமல்லி அருகே கூவம் ஆற்றிலிருந்து பங்காரு கால்வாய் பிரிந்து செல்லும் இடத்திற்கு அருகில் கூவம் ஆற்றின் கரையில் அமைந்துள்ள 11.50 ஏக்கர் வெள்ளப்பகுதியில் அடுக்குமாடி குடியிருப்புகளை கட்ட அனுமதிப்பது குறித்து சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் ஆய்வு செய்து வருவதாகவும், இதற்கான தொடக்கக்கட்ட அனுமதிகள் வழங்கப்பட்டு விட்டதாகவும்  வெளியாகியிருக்கும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.  சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் நடவடிக்கை மிகவும் ஆபத்தான விளையாட்டு என்று, பா.ம.க.  நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் எச்சரித்துள்ளார்.

இதுகுறித்த அவரின் அறிக்கையில், "கூவம் ஆற்றில் வழக்கத்தை விட கூடுதலாக சில ஆயிரம் கன அடிகள் தண்ணீர் திறந்து விடப்பட்டால் கூட அதையொட்டியுள்ள பகுதிகளில் வெள்ளம் ஏற்படுவது வாடிக்கை. கடந்த காலங்களில்  கூவம் ஆற்று வெள்ளம் குடியிருப்புப் பகுதிகளுக்குள் நுழைந்ததால் ஏற்பட்ட பேரழிவுகள் இன்னும் மனதை விட்டு அகலவில்லை. 

இத்தகைய சூழலில் கூவம் ஆற்று வெள்ளப்பகுதியில் அமைந்திருக்கும் 11.50 ஏக்கர் நிலப்பரப்பை நகர்ப்புறம் அல்லாத பயன்பாட்டுக்கான பகுதி  என்ற நிலையிலிருந்து, குடியிருப்புகள்  கட்டுவதற்கான  பகுதி என்று வகைப்பாடு மாற்றம் செய்வது குறித்து நேற்று நடைபெற்ற பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் 276-ஆம் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது. ஆணையத்தின் தொழில்நுட்பக் குழு இந்த வகைப்பாடு மாற்றத்திற்கு அனுமதி அளித்திருப்பதாக கூறப்படுகிறது.

சர்ச்சைக்குரிய நிலத்தின் வருவாய் ஆவணங்கள் தெளிவாக இல்லாத சூழலில்,  அந்த நிலத்தை  குடியிருப்பு பகுதியாக மாற்ற நீர்வளத்துறையும் நிபந்தனைகளுடன்  ஒப்புதல் அளித்துள்ளது.  சர்ச்சைக்குரிய நிலத்தின் மட்டத்தை 4.325 மீட்டர் அளவுக்கு உயர்த்த வேண்டும்  என்பது நீர்வளத்துறையின் நிபந்தனைகளில் ஒன்றாகும். 

அவ்வாறு செய்யப்பட்டால் அதைத் தவிர்த்து மற்ற பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஊருக்குள் நுழையும் ஆபத்து உள்ளது. இந்த ஆபத்துகள் எதையும் கருத்தில் கொள்ளாமல் கட்டுமான நிறுவனங்களின் நலன்களை மட்டுமே  கருத்தில் கொண்டு சி.எம்.டி.ஏ செயல்படுவது நியாயமல்ல.

சென்னையில் விதிகளுக்கு மாறாக கட்டிடங்கள் கட்ட அனுமதிக்கபட்டதால் ஏற்படும் பாதிப்புகளை அண்மையில் பெய்த மழையில் பார்த்தோம். அதிலிருந்து அரசும், சி.எம்.டி.ஏவும் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். அதற்கு மாறாக தங்களின் நலன்களையும்,  கட்டுமான நிறுவனத்தின் லாபத்தையும் மட்டுமே கணக்கில் கொண்டு அதிகாரத்தில் இருப்பவர்கள் முடிவெடுத்தால் அது பேரழிவுக்குத் தான் வழிவகுக்கும். 

எனவே, கூவம் ஆற்றின் வெள்ளப் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டும்  திட்டத்திற்கு  ஒப்புதல் அளிக்கக் கூடாது என்று சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்திற்கு  முதலமைச்சர் ஆணையிட வேண்டும்" என்று மருத்துவர் இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dr Ramadoss Condemn to TNgovt for Koovam River flood issue


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->