தர்மபுரியில் விரட்டப்படும் மக்கள்! தமிழக அரசு உடனே தலையிட டாக்டர் இராமதாஸ் வலியுறுத்தல்! - Seithipunal
Seithipunal


தருமபுரி மாவட்டத்தில், குறிப்பாக பென்னாகரம் தொகுதியில் வனத்தையொட்டிய பகுதிகளில் உழவு செய்தும், கால்நடைகளை வளர்த்தும் பிழைத்து வரும் மக்களை அங்கிருந்து அகற்றும் பணிகளில் வனத்துறை ஈடுபட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. வனத்தை மட்டுமே நம்பி வாழும் ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை பறிக்கும் செயல்களில் வனத்துறையினர் ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது என்று, பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டின் மிக மிக பின்தங்கிய மாவட்டம் தருமபுரி. தருமபுரி மாவட்டத்தில் குறிப்பிடத்தக்க அளவில் தொழிற்சாலைகளோ, பாசன வசதிகளோ இல்லை என்பதால் பிற மாநிலங்களுக்கு கூலி வேலைக்கு செய்தல், கால்நடைகளை வளர்த்தல் ஆகியவை தான் அங்குள்ள மக்களின் வாழ்வாதாரமாக உள்ளது. குறிப்பாக பென்னாகரம் பகுதி மக்கள் வனப்பகுதிகளில் கால்நடைகளை மேய்த்தல், விறகு பொறுக்குதல், உழவு செய்தல் போன்ற தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர். அது தான் அவர்களின் வாழ்வாதாரம்.

வனத்தை நம்பி வாழும் ஏழை மக்களுக்கு உதவியாக இருக்க வேண்டிய வனத்துறையினர் அவர்கள் மீது தொடர்ந்து அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விட்டு வருகின்றனர். கால்நடைகளை மேய்க்கும்  மக்களையும், விறகு பொறுக்க வரும் பெண்களையும் உடலாலும், மனதாலும் கொடுமைப்படுத்துவது, அவர்களின் குடியிருப்புகளை தீயிட்டு எரிப்பது, விளைநிலங்களை பாழ்படுத்துவது உள்ளிட்ட கொடிய செயல்களில் ஈடுபடுகின்றனர். 

ஏழை மக்களை மிரட்டி ரூ.1 லட்சம் தண்டம் செலுத்த வேண்டும் என்று அச்சுறுத்தும் வனத்துறையினர், ஒரு லட்சத்தை வாங்கி, அதில் ரூ.10 ஆயிரத்துக்கு மட்டும்  சான்று கொடுத்து விட்டு, மீதமுள்ள பணத்தை அவர்களே வைத்துக் கொள்வார்கள். அதை எதிர்த்துக் கேட்கும் மக்களை அடித்து, உதைப்பார்கள். வனத்துறையினரின் மனித உரிமை மீறல்களால் தருமபுரி மாவட்டத்தில், குறிப்பாக பென்னாகரம் பகுதியில் ஏராளமான ஏழை மக்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

அத்துமீறல்களின் அடுத்தக்கட்டமாக, வனப்பகுதிகளில் வாழ்வாதாரம் ஈட்டும் மக்களை அங்கிருந்து அகற்ற வனத்துறை முடிவு செய்திருக்கிறது. அதற்காக காவல்துறையினருடன் இணைந்து நாளை சிறப்பு வேட்டை நடத்தவிருப்பதாக தெரியவந்துள்ளது. இது ஏற்றுக்கொள்ளவே முடியாத வாழ்வாதாரப் பறிப்பு ஆகும். வனத்துறையினரின் இத்தகைய அத்துமீறலை தமிழ்நாடு அரசு அனுமதிக்கவே கூடாது.

வனப்பகுதியில் வாழும் மக்களுக்கு, அவர்களின் வாழ்வாதாரத்திற்காக வனத்தின் சொத்துகளை பயன்படுத்திக் கொள்ளும் உரிமை உண்டு. பழங்குடியின மக்களுக்கு மட்டுமே வனத்தை பயன்படுத்தும்  உரிமை உண்டு என்று கூறப்பட்டு வந்த நிலையில், கடந்த 2006ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட பழங்குடியினர் மற்றும் பிற பாரம்பரிய காடுவாழ் மக்கள் (காட்டு உரிமைகளுக்கு ஏற்பளித்தல்) சட்டத்தின் (Scheduled Tribes and Other Traditional Forest Dwellers (Recognition of Forest Rights) Act))மூலம் காடுகளிலும், அதையொட்டிய பகுதிகளிலும் பாரம்பரியமாக வாழ்ந்து வரும் மக்களுக்கும் அந்த உரிமை நீட்டிக்கப்பட்டது. 

அதை மதிக்காமல், வாழ்வாதாரம் தேடி வனப்பகுதிகளுக்குள் செல்வோரை தண்டிப்பதையும், வனத்தையொட்டிய பகுதிகளில் வாழும் மக்களை அங்கிருந்து வெளியேற்றுவதையும்,  அவர்கள் தலைமுறை தலைமுறையாக பயன்படுத்தி வரும் வேளாண் விளைநிலங்களை பறிப்பதையும் அனுமதிக்க முடியாது. இது மத்திய அரசின் வன உரிமை சட்டத்தை அப்பட்டமாக மீறும் செயலாகும்.

தருமபுரி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிகளில் தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வரும் மக்களுக்கு கடந்த காலங்களில் எந்த நெருக்கடியும் ஏற்பட்டதில்லை. தருமபுரி மாவட்டத்தின் புதிய வனத்துறை அதிகாரி பொறுப்பேற்ற பிறகு தான் அத்துமீறல்கள் கட்டவிழ்த்துவிடப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. 

மாவட்ட வனத்துறை அதிகாரியில் செயல்பாடுகள் மனித உரிமைகளை மீறும் செயல்; காடுகளில் வாழ்பவர்களின் வாழ்வாதாரத்தை பறிக்கும் செயல் என்பதை வனத்துறை பணியாளர்களே ஒப்புக்கொள்கின்றனர். மாவட்ட வனத்த்துறை அதிகாரியின் அத்துமீறலை அரசு அனுமதிக்கக்கூடாது.

தருமபுரி மாவட்டத்தில் அண்மைக்காலங்களில் மட்டும் மின்சாரம் தாக்கி 6 யானைகள் உயிரிழந்துள்ளன. காடுகளுக்குள் யானைகளுக்கு குடிநீர் கிடைக்காததால், குடிநீர் தேடி அவை மக்கள் வாழும் பகுதிகளில் நுழைகின்றன. யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகளின் தேவைகளை நிறைவேற்றி, அவற்றை பாதுகாக்க வேண்டிய வனத்துறை, அப்பாவி மக்களிடம் அத்துமீறுவதை ஏற்றுக்கொள்ளவே முடியாது.

வனத்தை நம்பி வாழும் மக்களின் வாழ்வாதாரம் தொடர்பான இந்த விவகாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உடனடியாக தலையிட்டு தீர்வு காண வேண்டும். பென்னாகரம் தொகுதியில் வனப்பகுதிகளில் வாழும் மக்களை அங்கிருந்து வெளியேற்றும் நடவடிக்கையை கைவிடும்படி வனத்துறை அதிகாரிகளுக்கு ஆணையிட வேண்டும்; வனப்பகுதிகளில் வாழும் மக்களிடம் எந்த வகையிலும் அத்துமீறக்கூடாது என்று அலுவலர்களுக்கு முதலமைச்சர் ஆணையிட வேண்டும்" என்று மருத்துவர் இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dr Ramadoss Condemn to TNGovt for Pennakaram Forest people issue


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->