விழுப்புரம் வருகிறார் முதலமைச்சர் மு.க ஸ்டாலின்.!
chief minister mk stalin visit vilupuram district
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அரசின் நலத்திட்டங்கள் மக்களை சென்றடைகிறதா என்பதை பார்வையிட்டு, நலத்திட்ட உதவிகளுக்கு அடிக்கல் நாட்டியும் வருகிறார். அந்த வகையில், தற்போது முதல்வர் மு.க ஸ்டாலின் இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக விழுப்புரம் மாவட்டத்திற்கு செல்கிறார்.
அங்கு அவருக்கு மாவட்ட எல்லையான ஓங்கூர் சுங்கச்சாவடி அருகில் வனத்துறை அமைச்சர் பொன்முடி தலைமையில் திமுகவினர் உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர். இந்த வரவேற்பை பெற்றுக்கொள்ளும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்கிருந்து புறப்பட்டு திண்டிவனம் நகரில் சென்னை சாலையில் மேம்பாலம் வழியாக ஜே.வி.எஸ். திருமண மண்டபம் வரை நடந்தே சென்று பொதுமக்களை சந்தித்து கோரிக்கை மனுக்களை பெறுகிறார்.
அதன் பிறகு அவர் அந்த மண்டபத்தில் நடைபெறும் திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்டு கட்சி நிர்வாகிகளுடன் கலந்துரையாடி சிறப்புரையாற்றுகிறார். கூட்டம் முடிந்தவுடன் திண்டிவனத்தில் இருந்து காரில் புறப்பட்டு விழுப்புரம் வருகை தரும் அவர், மாவட்ட அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள சுற்றுலா மாளிகையில் இரவு தங்குகிறார்.
மறுநாள், அதாவது நாளை காலை விழுப்புரம் வழுதரெட்டியில் ரூ.4 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் மறைந்த ஏ.கோவிந்தசாமியின் நினைவு அரங்கம் மற்றும் இடஒதுக்கீட்டு போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் உயிர்நீத்த 21 சமூகநீதி போராளிகளின் தியாகத்தை போற்றும் விதமாக கட்டப்பட்டுள்ள மணிமண்டபம் ஆகியவற்றை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து பார்வையிடுகிறார்.
தொடர்ந்து அதன் அருகில் நடைபெறும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று, பல்வேறு துறைகள் சார்பாக ஏழை, எளிய மக்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றுகிறார். இந்த விழாவை முடித்துக்கொண்டு அன்று மதியமே அவர், சென்னைக்கு புறப்பட்டுச் செல்கிறார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையை முன்னிட்டு அவரை வரவேற்று திண்டிவனம் நகரம், விழுப்புரம் நகரின் பல்வேறு இடங்களிலும் மற்றும் மாவட்டத்தின் முக்கிய சாலைகளிலும் விளம்பர பதாகைகள், பேனர்கள், அலங்கார வளைவுகள், கொடி தோரணங்கள் உள்ளிட்டவற்றை தி.மு.க.வினர் வைத்துள்ளனர்.
English Summary
chief minister mk stalin visit vilupuram district