35 ஆண்டில் பாமக | இனி வெற்றியே! சாதனைகளை பட்டியலிட்டு பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் மடல்! - Seithipunal
Seithipunal


பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் எழுதியுள்ள மடல் : என் உயிரினும் மேலான பாட்டாளி சொந்தங்களே...! தமிழ்நாட்டு அரசியலில் சமூகநீதிக்காகவும், சமத்துவத்திற்காகவும் முதல் குரல் எழுப்பும் கட்சியாகவும்,  மக்களின் பறிக்கப்பட்ட உரிமைகளை மீட்டெடுத்துக் கொடுப்பதை முழு நேரப் பணியாக கொண்டிருக்கும் கட்சியாகவும் திகழும் பாட்டாளி மக்கள் கட்சி வரும் 16 ஆம் நாள் 34 ஆண்டுகளை நிறைவு செய்து 35-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. வரலாற்று சிறப்பு மிக்க இத்தருணத்தில் கட்சியின் உயிராகவும், குருதிநாளங்களாகவும் திகழும் பாட்டாளி சொந்தங்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பாட்டாளி மக்கள் கட்சியின் வரலாறு என்பது காகிதங்களில் எழுதப்பட்டது அல்ல. முழுக்க, முழுக்க சாதனைகளால் செதுக்கப்பட்டது ஆகும். பொதுவாக அரசியல் கட்சிகளைப் பொறுத்தவரை சாதனைகள் எனப்படுபவை மகுடங்களில் பதிக்கப்பட்ட ரத்தினங்களாக இருக்கும். ஆனால், பாட்டாளி மக்கள் கட்சியைப் பொறுத்தவரை அதன் சாதனைகளே, முழுக்க முழுக்க ரத்தினங்களால் ஆன மகுடம் என்பது தான் சிறப்பு.

 

ஆண்டுகளின் அடிப்படையில் கணக்கிட்டால் தான் பாட்டாளி மக்கள் கட்சியின் வயது 34. பொதுவாக சாதனைகள் படைக்க ஆகும் காலத்தின் அடிப்படையில் கணக்கிட்டால் பாட்டாளி மக்கள் கட்சியின் வயது நூற்றாண்டைக் கடந்து இருக்கும். ஆம்... பிற அரசியல் கட்சிகள் நூறு ஆண்டுகளுக்கும் கூடுதலான காலத்தில் படைக்க வேண்டிய சாதனைகளை பாட்டாளி மக்கள் கட்சி 34 ஆண்டுகளில் படைத்திருக்கிறது.

தமிழ்நாட்டில் சமூகநீதி என்பது ஏட்டளவில் மட்டுமே இருந்து வந்த நிலையில், அதை செயல்பாட்டளவில் கொண்டு வந்தது பாட்டாளி மக்கள் கட்சி தான். 

விடுதலை அடைந்த காலத்திலிருந்து தமிழ்நாட்டில் ஒட்டுமொத்த பிற்படுத்தப்பட்ட மக்களும் ஒரே பிரிவாக கருதப்பட்டு, இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்த நிலையில், தொடர் போராட்டங்களை நடத்தி மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 20% இட ஒதுக்கீடு,  3.50% இஸ்லாமியர் உள் இட ஒதுக்கீடு, 10.50% வன்னியர் உள் இட ஒதுக்கீடு, பட்டியலினத்தவருக்கான  18% இட ஒதுக்கீட்டில் 3% அருந்ததியர் உள் இட ஒதுக்கீடு என மாநில அளவில் 4 வகையான இட ஒதுக்கீடுகளைப் போராடி பெற்றுக் கொடுத்தது வன்னியர் சங்கமும், அதைத் தொடர்ந்து தொடங்கப்பட்ட பாட்டாளி மக்கள் கட்சியும் தான் என்பது சமூகநீதியை அறிந்த அனைவருக்கும் தெரிந்த உண்மையாகும்.

அதேபோல், தேசிய அளவில் மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களின் மாணவர் சேர்க்கையில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு, மருத்துவப் படிப்புக்கான அகில இந்திய தொகுப்பில் பட்டியலினத்தவருக்கு 15%, பழங்குடியினருக்கு 7.5% இட ஒதுக்கீடு ஆகியவற்றை வென்றெடுத்துக் கொடுத்ததும் பாட்டாளி மக்கள் கட்சி தான். 

இவை தவிர்த்து மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த போது கிடைத்த அதிகாரத்தை பயன்படுத்தியும், பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக பல்வேறு போராட்டங்களை நடத்தியும் தமிழ்நாட்டுக்கு பாட்டாளி மக்கள் கட்சி வென்றெடுத்துக் கொடுத்த திட்டங்களும், உரிமைகளும்  பட்டியலிட முடியாத அளவுக்கு நீண்டவை. தமிழ்நாட்டில் வேறு எந்தக் கட்சிக்கும் இந்த வரலாறு இல்லை.

கடந்த ஓராண்டை மட்டும் எடுத்துக் கொண்டால்....

* ஆன்லைன் சூதாட்டத்தடை சட்டம் நிறைவேற்றப்பட்டது

* 500 மதுக்கடைகள் மூடப்பட்டது

* திருமணக் கூடங்களில் மது விற்பனை செய்யும் திட்டத்தை கைவிடச் செய்தது

* விளையாட்டு அரங்கங்கள், பன்னாட்டு மாநாடுகளில் மது வழங்க அனுமதிக்கும் தமிழக அரசின் திட்டத்திற்கு  சட்டப்படி தடை பெற்றது

* ஜூலை மாதம் முதல் நடைமுறைப்படுத்தப்படவிருந்த வீடுகளுக்கான மின்கட்டண உயர்வை தடுத்து நிறுத்தியது

* பொறியியல் படிப்புகளில் தமிழ்மொழிப் பாடம் கட்டாயமாக்கப்பட்டது மற்றும் அனைத்து பொறியியல் கல்லூரிகளிலும்  தமிழாசிரியர்கள் அமர்த்தப்படுவதை உறுதி செய்தது

* கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளை தமிழில் எழுத வேண்டும் என்ற அரசாணையை அனைத்து கடைகளும் செயல்படுத்த வேண்டும் என்று தமிழக அரசின் மூலம் வலியுறுத்தச் செய்தது

* புதுவையில் அரசு வேலைவாய்ப்புகளில் ரத்து செய்யப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டை மீண்டும் செயல்படுத்தச் செய்தது

* 28,000 சத்துணவு மையங்கள் மூடப்படுவதை தடுத்து நிறுத்தியது

* போதைப்பொருட்கள் விற்பனையை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியது

* சென்னை காலநிலை மாற்ற செயல்திட்டத்தை தமிழில் வெளியிடச் செய்தது

* சேலம் - உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள 8 புறவழிச்சாலைகளை நான்குவழிச் சாலைகளாக மாற்ற நடவடிக்கை எடுத்தது

* அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு இரு ஆண்டுகளாக வழங்கப்படாமல் இருந்த ஓய்வூதியப் பயன்களை அரசுக்கு அழுத்தம் கொடுத்து வழங்கச் செய்தது

பாட்டாளி மக்கள் கட்சியின் ஓராண்டு சாதனை இன்னும் நீளும். பொறுப்புள்ள எதிர்க்கட்சி என்பதற்கான அனைத்துத் தகுதிகளும் பாட்டாளி மக்கள் கட்சிக்குத் தான் உண்டு என்பதற்கான சான்றுகள் தான் மேற்குறிப்பிடப்பட்டுள்ள சாதனைகள் ஆகும்.

பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்புகளில் குறிப்பிடத்தக்கது அதிகாரத்திற்கு வராமலேயே எண்ணற்ற சாதனைகளை படைத்தக் கட்சி தான். இது எனக்கு பெருமையளிக்கும் செய்தி தான். ஆனால், அதே நேரத்தில் ஆட்சிக்கு வராமலேயே இவ்வளவு சாதனைகளை படைக்க முடிந்த பாட்டாளி மக்கள் கட்சி ஆட்சிக்கு வந்திருந்தால் இன்னும் அதிக சாதனைகளை படைத்திருக்கலாமே? தமிழ்நாட்டின் ஆளுங்கட்சியாக வேண்டும் என்ற கனவு கட்சி தொடங்கி 34 ஆண்டுகளாகியும் நிறைவேறவில்லையே என்ற ஏக்கம் இன்னும் என் மனதை உறுத்திக் கொண்டிருக்கிறது; வருத்திக் கொண்டிருக்கிறது.

எனது இந்த மன வருத்தத்தையும், மன உறுத்தலையும் போக்கும் அருமருந்து நீதான். நீ நினைத்தால்  நமது இலக்குகள் வசமாகும்; நமது கவலைகள் அனல் மீது பனித்துளியாகும். தமிழ்நாட்டை ஆட்சி செய்யும் அனைத்துத் தகுதிகளும் நமக்கு இருந்தாலும், அந்த நிலைக்கு நாம் இன்னும் உயராமல் போனதற்கான காரணங்கள் என்னென்ன? என்பதை நீ உனது நிலையிலும், நான் எனது நிலையிலும் ஆய்வு செய்து, நமது உத்திகளை மாற்றியமைத்துக் கொண்டாலே நம்மைச் சுற்றியுள்ள தளைகளை  வெட்டி எறிய முடியும். அதற்கான சிறந்த தருணமாக 35&ஆம் ஆண்டு விழாவை பயன்படுத்துவோம்.

மக்களின் ஆதரவு தான் நாம் நமது இலக்கை அடைவதற்கான பயணத்தை அடைவதற்கான எரிபொருள் ஆகும். அதனால் தான் நான் மீண்டும், மீண்டும், ‘‘மக்களை சந்தியுங்கள், அவர்களின் தேவைகளை அறியுங்கள், அவர்களுக்காக போராடி கோரிக்கைகளை நிறைவேற்றித் தாருங்கள்’’ என்று உங்களை வலியுறுத்தியும், அறிவுறுத்தியும் வருகிறேன். 

நமது இலக்கை அடைவதற்கான இறுதிப் போட்டிக்கு இன்னும் இரண்டரை ஆண்டுகள் இருக்கின்றன. ஆனால், அதற்கு முன்பாக நாம் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டிய மக்களவைத் தேர்தல் என்ற அரையிறுதிப் போட்டிக்கு இன்னும் எட்டு மாதங்கள் தான் உள்ளன. அரசியல் அரங்கங்களில் பேசப்படுவது போன்று முன்கூட்டியே மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டால், அரையிறுதிக்கு தயாராக நமக்கு இன்னும் 6 மாதங்கள் கூட இல்லை.

எனவே, பாட்டாளி மக்கள் கட்சியின் 35-ஆம் ஆண்டு விழா என்பது வெற்றியை நோக்கி விரைவாக  பயணிக்க உங்களைத் தூண்டும் தூண்டுகோலாக அமையட்டும். தமிழ்நாட்டு அரசியலில் நாம் படைக்காத சாதனைகளே இல்லை என்பது எந்த அளவுக்கு உண்மையோ, அதே அளவுக்கு உண்மை நாம் சந்திக்காத சோதனைகளே இல்லை என்பதும். ஆனாலும் நமது சோதனைக்காலம் என்பது முடிவுக்கு வந்து விட்டது. 

இனி தேர்தல் களத்தில் நாம் படைக்கப் போவதெல்லாம் சாதனைகள் தான், குவிக்கப் போவதெல்லாம் வெற்றிகள் தான். இதை உணர்ந்து பாட்டாளி சொந்தங்கள் அனைவரும் இப்போதே தேர்தல் பணிகளைத் தொடங்குங்கள். திண்ணைப் பிரச்சாரத்தின் மூலம் மக்களை அவர்கள் இடத்திற்கே சென்று சந்தியுங்கள். 

பாட்டாளி மக்கள் கட்சியின் சாதனைகளை எடுத்துக் கூறி, அவர்களின் ஆதரவை உறுதி செய்யுங்கள். அவ்வாறு செய்தால், அரையிறுதிப் போட்டியான 2024 மக்களவைத் தேர்தலில் நமது வெற்றி வாய்ப்பை உறுதி செய்ய முடியும்; அதற்கான பயணத்தைத் தொடங்குங்கள்.

அதற்கான விழாவாக பாட்டாளி மக்கள் கட்சியின் 35-ஆம் ஆண்டு விழா அமையட்டும். ஜூலை 16-ஆம் நாள் தமிழ்நாடு மற்றும் புதுவையின் அனைத்து பகுதிகளிலும் பாட்டாளி மக்கள் கட்சி என்ற முழக்கமே நிறைய வேண்டும். ஒவ்வொரு ஊரிலும், ஒவ்வொரு தெருக்களிலும் பாட்டாளி மக்கள் கட்சியின் கொடி ஏற்றப்பட வேண்டும். 

வாய்ப்புள்ள இடங்களில் பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும். எல்லா இடங்களிலும் நானும் உங்களுடன் இருப்பதாக நினைத்துக் கொண்டு கொண்டாடுங்கள். இந்தக் கொண்டாட்டங்களை 2024 மக்களவைத் தேர்தல் வெற்றிக் கொண்டாட்டத்துடன் நிறைவு செய்வோம். பாட்டாளி மக்கள் கட்சி வளர்க... வெல்க.

இவ்வாறு அந்த மடலில் மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dr Ramadoss letter For PMK 35 th year


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->