அண்ணா பல்கலை. உறுப்பு கல்லூரிகளின் பாடப்பிரிவுகளை மூடக் கூடாது - மருத்துவர் இராமதாஸ் கடும் கண்டனம்!
Dr Ramadoss Say About Anna University Issue 06042023
மாணவர் சேர்க்கை குறைந்ததைக் காரணம் காட்டி, 11 உறுப்புக் கல்லூரிகளில் கட்டிடவியல் (சிவில்), இயந்திரவியல் (மெக்கானிகல்) ஆகிய பொறியியல் பாடப்பிரிவுகளை மூட அண்ணா பல்கலைக்கழகம் திட்டமிட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. மாணவர்களின் கல்வியையும், ஆசிரியர்களின் வேலைவாய்ப்பையும் பாதிக்கும் அண்ணா பல்கலை.யின் இந்த முடிவு கண்டிக்கத்தக்கது என்று, பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் பொறியியல் கல்வியின் தேவையை கருத்தில் கொண்டு, அண்ணா பல்கலைக்கழகத்தின் வாயிலாக மாநிலம் முழுவதும் 14 உறுப்புக் கல்லூரிகள் பல்வேறு காலகட்டங்களில் தொடங்கப்பட்டன. அந்தக் கல்லூரிகளின் முதன்மையர்கள் மற்றும் பேராசிரியர்களுடன் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர் வேல்ராஜ், நேற்று காணொலி வழியாக கலந்தாய்வு நடத்தியிருக்கிறார்.
அதன் தொடர்ச்சியாக 14 உறுப்புக் கல்லூரிகளில் மதுரை, கோவை, திருச்சி ஆகிய நகரங்களில் உள்ள உறுப்புக்கல்லூரிகள் தவிர மீதமுள்ள 11 உறுப்புக்கல்லூரிகளில் உள்ள கட்டியவியல் பாடப்பிரிவின் தமிழ் மற்றும் ஆங்கில வழிப் பிரிவுகளையும், இயந்திரவியல் பாடப்பிரிவின் தமிழ்வழிப் பிரிவையும் மூடுவதற்கும், இயந்திரவியல் ஆங்கில வழிப் பிரிவை ரோபோட்டிக்ஸ் பாடப்பிரிவுடன் இணைக்கவும் பல்கலை. நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
மூடப்படும் பாடப்பிரிவுகளில் பணியாற்றி வரும் நிலையான பேராசிரியர்கள் மட்டும் மதுரை, கோவை, திருச்சி ஆகிய நகரங்களில் உள்ள உறுப்புக்கல்லூரிகளுக்கு பணியிட மாற்றம் செய்யப்படவுள்ளனர். 11 கல்லூரிகளிலும் பணியாற்றும் இடைக்கால பேராசிரியர்கள் அனைவரும் பணிநீக்கம் செய்யப்படுவர் என்றும், இதுகுறித்த செய்தி அவர்களுக்கு வாய்மொழியாக தெரிவிக்கப்பட்டு விட்டதாகவும் கூறப்படுகிறது.
கட்டிடவியல் மற்றும் இயந்திரவியல் பாடப்பிரிவுகள் மூடப்படுவதற்காக பல்கலைக்கழக நிர்வாகத்தின் சார்பில் கூறப்படும் காரணத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. கட்டிடவியல் மற்றும் இயந்திரவியல் பாடப்பிரிவில் மாணவர் சேர்க்கை மிகப்பெரிய அளவில் குறைந்து விட்டதாகவும், பல்கலைக்கழகத்தின் நிதிநிலைமை மோசமடைந்து இருப்பதால், இந்த பாடப்பிரிவுகளை தொடர்ந்து நடத்த முடியாது என்றும் பல்கலைக்கழக நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்படுகிறது. கல்வி சார்ந்த செயல்பாடுகளில் இப்படி முடிவெடுக்க முடியாது.
உறுப்புக் கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியர்களில் பெரும்பான்மையினர் இடைக்கால பணியாளர்கள் தான். அவர்களில் பலர் பத்தாண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகின்றனர். அவர்களை ஒரே ஆணையில் பணிநீக்குவது நியாயமற்றது. பத்தாண்டுகளுக்கும் கூடுதலாக உறுப்புக் கல்லூரிகளில் பணியாற்றியவர்களால் இப்போது வேறு கல்லூரிகளுக்கு சென்று பணியில் சேர முடியாது.
அதனால், அவர்கள் வாழ்வாதாரத்தை இழப்பார்கள். அவர்களின் குடும்பத்தினரும் கல்வியும், உணவும் கிடைக்காமல் வறுமையில் வாட நேரிடும். அவர்கள் மட்டுமின்றி, உறுப்புக் கல்லூரிகளில் சேர்ந்து மிகக்குறைந்த கட்டணத்தில் கட்டிடவியல் அல்லது இயந்திரவியல் படிக்கும் வாய்ப்பையும் அக்கல்லூரிகள் உள்ள பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் இழப்பர்.
இயந்திரவியல், கட்டிடவியல் பாடப்பிரிவுகளில் மாணவர் சேர்க்கை குறைந்ததற்கு இடைக்கால ஆசிரியர்களும், மாணவர்களும் எந்த வகையிலும் காரணம் அல்ல. இந்தக் கல்லூரிகள் தொடங்கப்பட்டு 10 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்ட நிலையில், அவற்றில் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படாதது தான் மாணவர் சேர்க்கை குறைந்ததற்கு காரணம்.
அண்ணா பல்கலைக்கழகத்தில் இதே பாடப்பிரிவுகளில் சேருவதற்கு கடும்போட்டி நிலவும் நிலையில், உறுப்புக் கல்லூரிகளில் சேர மாணவர்கள் முன்வராததற்கு காரணம் இரண்டுக்கும் இடையிலான கட்டமைப்பு வசதி வேறுபாடுகள் தான். உறுப்புக்கல்லூரிகளின் கட்டமைப்பு வசதிகளை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு இணையாக மேம்படுத்தும் சவாலைத் தான் பல்கலைக்கழக நிர்வாகம் ஏற்றுக்கொண்டிருக்க வேண்டுமே தவிர, பாடப்பிரிவுகளை மூடும் கோழைத்தனமான முடிவை அல்ல.
தமிழுக்கு ஆற்றிய பணிகள் குறித்த விவாதம் எழும்போதெல்லாம், பத்தாண்டுகளுக்கு முன்பே தமிழ் வழியில் பொறியியல் படிப்பை அறிமுகப்படுத்தியதை தமிழ்நாடு அரசு பெருமையுடன் நினைவு கூறுகிறது. அதற்கு முற்றிலும் மாறாக, ஒரே நேரத்தில் 11 பாடப்பிரிவுகளின் தமிழ்வழிப் பிரிவை மூடுவது அரசுக்கும், அண்ணா பல்கலைக்கழகத்திற்கு கண்டிப்பாக பெருமை சேர்க்காது.
எனவே, 11 உறுப்புக் கல்லூரிகளில் கட்டிடவியல் மற்றும் இயந்திரவியல் பாடப்பிரிவுகளை மூடும் திட்டத்தைக் கைவிடும்படி அண்ணா பல்கலைக்கழகத்திற்கு தமிழ்நாடு அரசு ஆணையிட வேண்டும். அண்ணா பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் இடைக்கால பேராசிரியர்கள் அனைவருக்கும் பணி நிலைப்பு வழங்கி, அவர்களை பாதுகாக்க வேண்டும்" என்று மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார்.
English Summary
Dr Ramadoss Say About Anna University Issue 06042023