இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு உதவினால் மட்டும் விடியல் பிறக்கும் - மருத்துவர் இராமதாஸ்.!
Dr Ramadoss Say About Annamalai University Staff Salary Issue
அண்ணாமலை பல்கலை. பேராசிரியர்களுக்கு ஏழாவது குழு ஊதியத்தை வழங்க வேண்டும் என்று, பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது, "தமிழ்நாட்டில் அனைத்து பல்கலைக்கழகங்களின் பேராசிரியர்களுக்கும் ஏழாவது ஊதியக்குழுவின் பரிந்துரைகளின்படி ஊதியம் வழங்கப்பட்டுவரும் நிலையில், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக பேராசியர்களுக்கு மட்டும் அப்பரிந்துரைகள் செயல்படுத்தப்படவில்லை.
ஒரே வகையான பணி செய்யும் பேராசிரியர்களுக்கு பல்கலைக்கழகத்திற்கு பல்கலைக்கழகம் ஊதியம் மாறுபடுவது நியாயம் அல்ல. மத்திய அரசு பணியாளர்களுக்கான 7-ஆவது ஊதியக்குழுவின் பரிந்துரைகளைப் பின்பற்றி தமிழ்நாடு அரசும் அதன் ஊழியர்களுக்கு 2017-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் புதிய ஊதிய விகிதத்தை நடைமுறைப்படுத்தியது.
பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரி ஆசிரியர்களுக்கு புதிய ஊதிய விகிதத்தை செயல்படுத்துவதற்கு தனி நடைமுறைகள் இருப்பதால், அவர்களுக்கு மட்டும் தமிழகத்தில் ஊதியம் உயர்த்தப்படவில்லை. பேராசிரியர்களுக்கு புதிய ஊதிய விகிதத்தை செயல்படுத்துவதற்கான அனைத்து நடைமுறைகளையும் முடித்து மத்திய அரசு பல்கலைக்கழக பேராசிரியர்களுக்கு ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகள் 2018-ஆம் ஆண்டு ஜூலை முதல் நடைமுறைப்படுத்தப்பட்டன.
அதன்படி தமிழகத்தில் உள்ள அரசு பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளின் பேராசிரியர்களுக்கு ஊதிய உயர்வு 2018-ஆம் ஆண்டு ஜூலை 6-ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. அவர்களுக்கு 2017-ஆம் ஆண்டு அக்டோபர் முதல் 2018 ஜூன் வரை ஊதிய உயர்வு நிலுவைத்தொகை கணக்கிடப்பட்டு அதுவும் வழங்கப்பட்டு விட்டது.
ஆனால், தமிழ்நாட்டின் மிகவும் மூத்த மற்றும் பெரிய பல்கலைக்கழகங்களில் ஒன்றான அண்ணாமலை பல்கலைக்கழக பேராசிரியர்களுக்கு, 2016-ஆம் ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதி முதல் நடைமுறைப் படுத்தப்பட்டிருக்க வேண்டிய ஏழாவது ஊதியக்குழுவின் பரிந்துரைகள், அதன்பின்னர் 6 ஆண்டுகள் நிறைவடைந்த பிறகும் கூட செயல்படுத்தப்படவில்லை.
அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பணியாற்றி மிகைப் பணியாளர்களாக அறிவிக்கப்பட்டு பிற பல்கலைக்கழகங்களுக்கும், கல்லூரிகளுக்கும் மாற்றப்பட்ட பேராசிரியர்களுக்கும் பிற பணியாளர்களுக்கும் கூட ஏழாவது ஊதியக்குழுவின் பரிந்துரை நடைமுறைப்படுத்தப்பட்டு விட்டது.
அதுமட்டுமின்றி, அண்ணாமலை பல்கலைக்கழக பேராசிரியர்களுக்கும், பிற பணியாளர்களுக்கும் மற்ற உரிமைகளும் மறுக்கப்படுகின்றன. ஓய்வூதியத்தின் ஒரு பகுதியை முன்கூட்டியே பெறும் கம்யூட்டேசன் நிதி கடந்த 2013-ஆம் தேதி முதல் வழங்கப்படவில்லை.
அதேபோல், ஓய்வூதியர்களுக்கு சேர வேண்டிய ஒப்படைப்பு விடுப்புக்கான தொகை, பணிக்கொடை ஆகியவற்றில் 50% மட்டுமே வழங்கப்படுகிறது.. ஓய்வு பெறும் நாளில் ஒரு ரூபாய் கூட ஓய்வூதியர்களுக்கு வழங்கப்படுவதில்லை. இதனால் ஓய்வூதியர்கள் தங்கள் வாரிசுகளின் படிப்பு மற்றும் திருமண செலவுகளுக்கு பணமின்றி வாடுகின்றனர்.
அண்ணாமலை பல்கலைக்கழக பேராசிரியர்களுக்கு ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகள் செயல்படுத்தப் படாதது, பேராசிரியர்களுக்கும், ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கும் பிற உரிமைகள் மறுக்கப்படுவது உள்ளிட்ட அனைத்து அநீதிகளுக்கும் பல்கலைக்கழக நிர்வாகத்தின் சார்பில் காரணமாக கூறப்படுவது நிதி நெருக்கடி தான்.
தனியார் நிர்வாகத்தின் கீழ் அண்ணாமலை பல்கலைக்கழகம் இருந்த போது ஏற்பட்ட சீரழிவின் காரணமாக ஊழலும், நிதி நெருக்கடியும் ஏற்பட்டதைக் காரணம் காட்டித் தான், 2013-ஆம் ஆண்டில் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் நிர்வாகத்தை தமிழக அரசே ஏற்றுக்கொண்டது.
அதன்பின் 8 ஆண்டுகள் நிறைவடைந்து விட்ட நிலையில், பல்கலைக்கழகத்தின் நிதிநிலையை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசும், அதன் கீழ் செயல்படும் பல்கலைக்கழக நிர்வாகமும் தான் செய்திருக்க வேண்டும். 2013-ஆம் ஆண்டில் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் தமிழக அரசால் எடுத்துக் கொள்ளப்பட்ட பின்னர் இன்று வரை 1250 ஆசிரியர்கள் பிற கல்வி நிறுவனங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்; 500 பேராசிரியர்கள் ஓய்வு பெற்றுள்ளனர்.
இவர்களுக்கான ஊதிய சுமை குறைந்தாலும் கூட அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் நிதி நெருக்கடி குறையவில்லை; மாறாக 2012-ஆம் ஆண்டில் 530 கோடியாக இருந்த நிதிப்பற்றாக்குறை இப்போது மும்மடங்குக்கும் கூடுதலாக அதிகரித்து ரூ.1800 கோடியாக உயர்ந்துள்ளது. இதற்கும் அரசும், பல்கலைக்கழகமும் தான் காரணமே தவிர அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள் எந்த வகையிலும் காரணம் அல்ல.
அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் நிதி நெருக்கடி தீராததற்கு இன்னொரு முக்கியக் காரணம் அப்பல்கலைக்கழகத்தின் நிதிநெருக்கடியை தீர்ப்பதற்காக தமிழக அரசு சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று அந்த பல்கலைக்கழக நிர்வாகியாக அரசால் நியமிக்கப்பட்ட சிவ்தாஸ் மீனா அளித்திருந்த பரிந்துரையை 8 ஆண்டுகளாக அதிமுக அரசு நடைமுறைப்படுத்தாதது தான். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திற்கு ரூ.1000 கோடி சிறப்பு நிதி வழங்கப்பட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால், இன்று வரை அந்த கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்றவில்லை.
அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் நிதி நெருக்கடி தீர்ந்த பிறகு தான் அதன் பேராசிரியர்களுக்கு ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் செயல்படுத்தப்படும் என்றால் அது எந்தக் காலத்திலும் நடக்க வாய்ப்பில்லை.
இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு உதவினால் மட்டும் தான் பேராசிரியர்களுக்கு ஏதேனும் நன்மை நடக்கும். எனவே, தமிழக அரசு அண்ணாமலை பல்கலைக்கழக பேராசிரியர்களுக்கு ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகளை செயல்படுத்தும்படி பல்கலைக்கழக நிர்வாகத்தை அறிவுறுத்த வேண்டும்; அதற்குத் தேவைப்படும் சிறப்பு நிதியையும் தமிழக அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டும்" என்று, மருத்துவர் இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
English Summary
Dr Ramadoss Say About Annamalai University Staff Salary Issue