ரெட் சிக்னலை மீறி ஓடிய ரயில்.. இரவில் அலறிய பயணிகள்.. அரக்கோணத்தில் பெரும் பரபரப்பு..!!
Electric train violated red signal near arakkonam
சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து திருத்தணிக்கு சென்ற மின்சார ரயில் புளியமங்கலம் ரயில் நிலையத்தில் நிற்காமல் சென்றதால் பயணிகள் மத்தியில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. சென்னைக்கு அரக்கோணம், திருத்தணி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து மக்கள் வேலைக்காக தினமும் மின்சார ரயில் பயன்படுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் அரக்கோணம் அருகே உள்ள புளிமங்கலம் பகுதியில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் நாள்தோறும் வேலைக்காக சென்னைக்கு வந்து செல்கின்றனர். நேற்று இரவு சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து அரக்கோணம் நோக்கிச் சென்ற மின்சார ரயில் புளியமங்கலம் ரயில் நிலையத்தில் நிற்காமல் சென்றது.
புளியமங்கலம் ரயில் நிலையத்தில் ரயில் நிற்பதற்காக சிவப்பு நிற எச்சரிக்கை விளக்கு போடப்பட்டும் மின்சார ரயில் நிற்காமல் சென்றுள்ளது. இதனால் வேலை முடிந்து வீடு திரும்பும் பயணிகள் மற்றும் தொழிலாளர்கள் பதறி போனார்கள். புளியமங்கலம் ரயில் நிலைய அதிகாரிகளும் குழப்பம் அடைந்தனர். இதனை அடுத்து மின்சார ரயில் அரக்கோணம் ரயில் நிலையத்தில் வந்தடைந்தது.
அப்போது புளியமங்கலத்தில் இறங்க வேண்டிய பயணிகள் ரயில் ஓட்டுநரான ஜோஸ்வா மற்றும் தியாகராஜனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். புளிமங்கலம் ரயில் நிலையத்தில் சிகப்பு விளக்கு எரிந்த போது எவ்வாறு ரயில்வே இயக்குநீர்கள் என பொதுமக்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு ரயில் ஓட்டுனர் ஜோஸ்வா விரைவு ரயில் என நினைத்து விட்டதாகவும், புளியமங்கலத்தில் இந்த ரயிலுக்கு நிறுத்தம் இல்லை என்ற ஞாபக மறதியில் இயக்கி விட்டதாகவும் தெரிவித்து பயணிகளிடம் மன்னிப்பு கேட்டு உள்ளார். ரயில் ஓட்டுநரின் பொறுப்பற்ற பேச்சு பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அண்மை காலமாக இந்தியாவில் அதிக ரயில் விபத்துக்கள் தொடர்ந்து ஏற்பட்டு வரும் இந்த சூழலில் சிவப்பு சிக்னலையும் மீறி ரயில் இயக்கப்பட்டது எப்படி? புளியமங்கலம் ரயில் நிலைய மேலாளர் என்ன செய்தார்.? என்ற பல்வேறு கேள்விகள் எழுகிறது. இந்த விவகாரத்தால் அரக்கோணத்தில் இருந்து மின்சார ரயில் 20 நிமிடங்கள் கால தாமதமாக திருத்தணிக்கு புறப்பட்டு சென்றது.
English Summary
Electric train violated red signal near arakkonam