நடுக்கடலில் மீனவர்களிடையே ஏற்பட்ட மோதலில் நாட்டு வெடிகுண்டு வீச்சு.!
fishermans clash in mid sea in kanniyakumari
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சின்னமுட்டம் பகுதியை சேர்ந்தவர் சமாதானராஜ். இவருக்கு சொந்தமான விசைப்படகில் பதின்மூன்று மீனவர்கள் மீன்பிடிப்பதற்காக கடலுக்குப் புறப்பட்டு சென்றனர்.
இவர்கள் நெல்லை மாவட்டம் இடிந்தகரையில் இருந்து சுமார் எட்டு மைல் தொலைவில் மீன்பிடித்துக்கொண்டிருந்தனர். இதையறிந்த இடிந்த கரை மீனவர்கள் சுமார் 30-க்கும் மேற்பட்டவர்கள் பன்னிரண்டு நாட்டுப்படகுகளில் சென்று அங்கு மீன்பிடித்துக்கொண்டிருந்த சின்னமுட்டம் மீனவர்களை சுற்றி வளைத்தனர்.
அங்கு அவர்கள் சின்னமுட்டம் மீனவர்களிடம், அந்த பகுதியில் தாங்கள் மீன்பிடிப்பதற்கு வலை விரித்து வைத்திருப்பதாகவும், உங்களால் அந்த வலைகள் அனைத்தும் சேதம் அடைந்துள்ளது என்று அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
சிறிது நேரத்தில், அவர்களிடையே வாக்குவாதம் முற்றியது. அப்போது ஒரு தரப்பினர் நாட்டு வெடிகுண்டு வீசி மற்றொரு தரப்பினர் மீது தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இந்த வாக்குவாதம் தொடர்பாக சின்ன முட்டம் மீனவர்கள் வீடியோ ஒன்றை கன்னியாகுமரி மாவட்ட கடலோர காவல் குழும போலீசாரிடம் காண்பித்து நடவடிக்கை எடுக்குமாறு புகார் அளித்தனர்.
அந்த புகாரின் படி, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூடங்குளம் கடலோர காவல்படை போலீசாருக்கும் மீனவர்கள் மனு அளித்துள்ளனர். இதையடுத்து போலீசார் சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இதைத் தொடர்ந்து, சின்னமுட்டம் மீனவர்களிடம் தகராறில் ஈடுபட்ட இடிந்த கரை நாட்டுப்படகு மீனவர்களான ஜெனிகர், சிபி, பீட்டர், ஆனந்த், சைல்ஸ், ராயப்பன், வளன் உள்ளிட்ட 30 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதன் பின்னர் அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
இதேபோல், இடிந்தகரை மீனவர்களும் சின்னமுட்டம் மீனவர்கள் மீது கூடங்குளம் கடலோர காவல்படை போலீசில் புகார் தெரிவித்துள்ளனர். அந்த புகாரின் படியும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
fishermans clash in mid sea in kanniyakumari