சேலம் || வங்காநரி ஜல்லிக்கட்டுக்கு தடை.. மீறினால் ரூ.5 லட்சம் அபராதம் என வனத்துறை அறிவிப்பு..!!
Forest department announced Rs5 lakh fine for Wanganari jallikattu
சேலம் மாவட்டத்தை அடுத்த வாழப்பாடி பகுதியில் உள்ள சின்னம்மநாயக்கன் பாளையம், ரங்கனூர், கொட்டிவாடி, சின்ன கிருஷ்ணாபுரம், தமையனூர் உள்ளிட்ட கிராமங்களில் தை மாதத்தில் விளைநிலங்களில் பயிர் செய்வதற்கு முன்னர் நரி முகத்தில் விழித்தால் பலன் கிடைக்கும் என்பது மக்களின் நம்பிக்கை. ஆண்டு தோறும் காணும் பொங்கல் அன்று கிராம மக்கள் காவல் தெய்வங்களுக்கு சிறப்பு பூஜை நடத்துகின்றனர். இதனைத் தொடர்ந்து வீட்டுக்கு ஒருவர் வீதம் நடிக்கும் வலையோடு அருகில் உள்ள காட்டுப் பகுதிகளுக்கு சென்று வலை விரித்து வங்காநரியை பிடித்து வருவார்கள்.
பின்னர் வங்காநரியின் காலில் கயிறு கட்டி கோவில் மைதானத்தில் மக்கள் மத்தியில் ஓட விடுவார்கள். இந்த வினோத விழாவிற்கு வங்காநரி ஜல்லிக்கட்டு மற்றும் நரியாட்டம் என பெயர் உண்டு. வங்காநரி ஆட்டம் முடிந்த பின்னரே எருது ஆட்டம் நடத்தி பொங்கல் பண்டிகையை நிறைவு செய்வார்கள். வங்காநரி வனவிலங்கு பட்டியலில் உள்ளதால் அவற்றை பிடிப்பதற்கு வனத்துறை தடை விதித்துள்ளது. தடை மீறி பிடித்தால் ரூ.50 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படுகிறது.
இந்த நிலையில் வங்காநரி குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வாழப்பாடி வனத்துறை சார்பில் நேற்று ரங்கனூர், சின்னம்மநாயக்கன்பாளையம் கிராமங்களில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது. இந்த விழிப்புணர்வு முகாமில் வனவிலங்குக்கான வங்காநரியை பிடித்து வழிபடுவதும் ஜல்லிக்கட்டு நடத்துவதும் தண்டனைக்குரிய குற்றமாகும். எனவே வங்காநரி பிடிப்பதை கைவிட வேண்டும் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. அதனையும் மீறி வங்காளியை பிடித்தால் 5 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.
English Summary
Forest department announced Rs5 lakh fine for Wanganari jallikattu