சேவல்கள் வைத்து சூதாட்டம்! 13 பேர் கைது!
Gambling with roosters! 13 people arrested
ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி அருகே மாரம்பாளையம், முந்திரி தோப்பு பகுதிகளில் சேவல்களை வைத்து சட்டவிரோதமாக சூதாட்டம் நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இந்த தகவலின் அடிப்படையில், புளியம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்புரத்தினம் தலைமையில் சத்தியமங்கலம் குற்றப்பிரிவு போலீசார் மற்றும் புளியம்பட்டி போலீசார் இந்த சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். அங்கு சிலர் இரு சக்கர வாகனங்களை நிறுத்தி விட்டு வெட்ட வெளியில் கட்டு சேவல்களை வைத்து சூதாட்டம் நடத்தி கொண்டு இருந்தனர்.
இந்நிலையில், போலீசாரை கண்டதும் அவர்கள் தப்பி ஓட முயன்றனர். ஆனால் போலீசார் அவர்களை சுற்றி வளைத்து பிடித்தனர். இதில் சூதாட்டத்திற்கு பயன்படுத்திய ஐந்து சேவல்கள், ரூ.97120 பணம், 11 செல்போன்கள் மற்றும் 13 இரு சக்கர வாகனங்கள், சேவல் சூதாட்டத்திற்கு பயன்படுத்திய பொருட்களை அனைத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதனை தொடர்ந்து அவர்களிடம் விசாரணையில் நடத்தியதில், அவர்கள் சத்தியமங்கலம் உத்தண்டியூர் வீரமணிகண்டன் (33), பவானி அஜித் (26), புளியம்பட்டி பிரேம் ஆனந்த் (31), கோவை மாவட்டம் அன்னூர் சசிகுமார் (30), பவானிசாகர் ரமேஷ் (40), சுபாஷ் (24), அவினாசி மணிகண்டன் (26), அன்னூர் பிரபாகரன் (32), யுவராஜ் (32), சரவணன் (39), தினகரன் (25), லோகநாதன் (64) , ரமேஷ் குமார் (28), என்பது தெரிய வந்ததுள்ளது.
போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து சூதாட்டம் ஆடிய 13 பேரையும் கைது செய்தனர். இந்த பகுதிகளில் வெளி மாவட்டம் மற்றும் சுற்று வட்டார பகுதியில் இருந்து கட்டு சேவல்களை கொண்டு வந்து சிலர் தொடர்ந்து சூதாட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் மது போதையில் தகராறில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அந்த வழியாக தோட்டம் காடுகளுக்கு செல்வதற்கு மிகவும் பயமாக உள்ளது என பொதுமக்கள் புகார் கூறினர்.
எனவே இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என அந்த பகுதியை சேர்ந்தவர்கள் போலீசாரிடம் வலியுறுத்தி உள்ளனர்.
English Summary
Gambling with roosters! 13 people arrested