திருச்சியில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நடைபெறும் விநாயகர் சிலை ஊர்வலம்!
ganesha statue procession held in trichy with various restrictions
நாடு முழுவதும் நேற்று முன்தினம் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில், தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் உள்ள மக்கள் தங்கள் பகுதிகளில் வைக்கப்பட்ட விநாயகர் சிலையை ஊர்வலமாக எடுத்து சென்று நதிக்கரை, ஆறு மற்றும் கடல் உள்ளிட்ட நீர்நிலைகளில் கரைத்து வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு திருச்சி மாநகரில் 242 இடங்களிலும், புறநகர் பகுதிகளில் 932 இடங்களிலும் என திருச்சி மாவட்டத்தில் மொத்தம் ஆயிரத்து 174 இடங்களில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தது. இந்த விநாயகர் சிலைகள் அனைத்தும் இன்று மாலை ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு காவிரி ஆற்றில் கரைக்கப்பட உள்ளன. விநாயகர் சிலை கரைப்பதற்கு எடுத்து செல்லும் போது சிலை அமைப்பாளர்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.
அதன்படி, ஊர்வலத்தின் போது ஒலிப்பெருக்கிகளின் சத்தம் குறிப்பிட்ட டெசிபலுக்கு மிகாமல் ஒலிக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும், ஊர்வலம் மாலை 3, 4 மணிக்குள் புறப்பட வேண்டும். இரவு 10 மணிக்குள் ஊர்வலத்தை கண்டிப்பாக முடித்துவிட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஊர்வலத்தின் போது அமைப்பாளர்கள் அவர்களது குழுவினரை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் மற்றும் பிற மதத்தினரை புண்படுத்தும் வகையிலான கோஷங்கள் மற்றும் செயல்களில் ஈடுபடக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இரவு 10 மணி வரை சிலைகள் கரைப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளதால், சிலை கரைக்கப்படும் இடத்தில் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் ஒலி, ஒளி அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் மது அருந்தியவர்கள் ஊர்வலத்தில் கலந்து கொள்ளாமல் இருப்பதை விழாக்குழுவினர் உறுதி செய்ய வேண்டும் என்றும், எந்த ஒரு சிறு பிரச்னையும் இன்றி ஊர்வலம் செல்ல உறுதுணையாக இருக்க வேண்டும் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், விநாயகர் சிலை ஊர்வலம் நிகழ்வை முன்னிட்டு, திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி தலைமையில் 1700 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
English Summary
ganesha statue procession held in trichy with various restrictions