பெட்ரோல் குண்டு வீச்சில் திடீர் திருப்பம்.!! என்ட்ரி கொடுக்கும் என்.ஐ.ஏ!!
Governor house petrol bomb attack case handed over to NIA
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையின் மீது கடந்த அக்டோபர் 25ஆம் தேதி கருக்கா வினோத் என்பவர் பெட்ரோல் குண்டு வீச முயன்ற சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் கருக்கா வினோத்தை மடக்கிப் பிடித்ததோடு அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.
இவர் ஏற்கனவே தமிழக பாஜக மாநில அலுவலகமான கமலாலயம் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில் கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் ஜாமீனில் வெளிவந்த மறுநாளே ஆளுநர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீச முயன்றதால் பல சந்தேகங்கள் எழுந்தது.
ஆனால் கைது செய்யப்பட்ட கருக்கா வினோத் நீண்ட நாட்களாக சிறையில் இருக்கும் சிறைவாசிகள் விடுதலை கோப்புகள் மற்றும் தமிழ்நாட்டில் நீட் தேர்வு ரத்து மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காததால் பெட்ரோல் குண்டு வீச முயன்றதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதனிடையே சென்னை புழல் சிறையில் இருக்கும் கருக்கா வினோத் மீது ஐந்தாவது முறையாக குண்டர் சட்டம் பாய்ந்தது. சென்னை மாநகர் காவல் ஆணையர் பரிந்துரையின் பேரில் அவர் குண்டர் சட்டத்தில் மீண்டும் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் ஆளுநர் மாளிகையின் மீது பெட்ரோல் குண்டு வீச முயன்ற சம்பவம் தொடர்பான வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பு விசாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான அனைத்து நடைமுறைகளும் முடிக்கப்பட்டு சென்னை காவல்துறையினர் தேசிய புலனாய்வு அதிகாரிகளிடம் விசாரணை குறித்த அனைத்து ஆவணங்களையும் ஒப்படைத்துள்ளதாவும், அதனை தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் ஏற்றுக்கொண்டு கருக்கா வினோத் மீது வெடிபொருள் தடுப்பு, கூட்டுச்சதி திட்டம், அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
English Summary
Governor house petrol bomb attack case handed over to NIA