பள்ளியில் சேர்க்க TC கேட்கக் கூடாது - உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.! - Seithipunal
Seithipunal


கொரோனா காலக்கட்டத்தில், தனியார் பள்ளிகளில் பயின்ற மாணவர்கள் கட்டணம் செலுத்த முடியாமல், தனியார் பள்ளிகளை விட்டு விலகி, அரசு பள்ளி உள்ளிட்ட மற்ற பள்ளிகளில் சேர முயன்றனர்.

இதற்காக, மாற்றுச் சான்றிதழ் கேட்டபோது, தனியார் பள்ளிகள் கட்டண பாக்கி உள்ளிட்ட காரணங்களை கூறி, சான்றுகள் தர மறுத்தன. இதையடுத்து, மாற்றுச் சான்றிதழ் இல்லாமல், மாணவர்களை சேர்க்கும்படி, பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து, அகில இந்திய தனியார் பள்ளிகள் சட்டப் பாதுகாப்பு சங்கம் உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற தனி நீதிபதி, 'மாற்றுச் சான்றிதழ் கேட்டு, தற்போது படிக்கும் பள்ளிகளில் விண்ணப்பிக்க வேண்டும்.

பிறகு ஒரு வாரத்தில் அவர்களுக்கு சான்றிதழ் வழங்க வேண்டும்; எந்த காரணத்துக்காகவும், மாற்று சான்றிதழ் மறுக்கக் கூடாது' என உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து பள்ளிக்கல்வித்துறை சார்பில் மேல்முறையீடு செய்தது. இந்த மனு, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், குமரப்பன் உள்ளிட்டோர் அமர்வில், விசாரணைக்கு வந்தது.

அப்போது, கட்டணம் செலுத்தவில்லை என்பதற்காக, அந்த மாணவனின் மீது களங்கம் கற்பிப்பதை அனுமதிக்க முடியாது. கட்டண பாக்கியை வசூலிக்க, மாற்றுச் சான்றிதழ் ஒரு கருவி அல்ல. மாற்றுச் சான்றிதழ் என்பது, அந்த மாணவனின் தனிப்பட்ட ஆவணம்.

அதில், தேவையின்றி குறிப்புகளை பள்ளி நிர்வாகம் எழுதக் கூடாது. பள்ளிகளுக்கு கட்டண பாக்கியை செலுத்த வேண்டியது, பெற்றோரின் கடமை. இதனை செலுத்த தவறினால், சம்பந்தப்பட்ட பள்ளிகள் சட்டப்படி வசூலித்துக் கொள்ள வேண்டும்.

சான்றிதழில், கட்டணம் செலுத்தாதது பற்றி குறிப்பு எழுதுவது, அந்தக் குழந்தையை அவமானப்படுத்துவது போன்ற செயல். அதுமட்டுமல்லாமல், அந்த மாணவனை மற்ற பள்ளிகளில் சேர்க்க மாட்டார்கள். மாற்றுச் சான்றிதழில் தேவையின்றி குறிப்புகள் எழுதக் கூடாது என அனைத்து பள்ளி நிர்வாகத்துக்கும், அரசு சுற்றறிக்கை பிறப்பிக்க வேண்டும். மீறினால், சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கல்வி பெறும் உரிமை சட்டத்தில், மாற்றுச் சான்றிதழ் கட்டாயமாக்கப்படவில்லை. ஆகவே, தனி நீதிபதியின் உத்தரவு, ரத்து செய்யப்படுகிறது. தமிழ்நாடு கல்வி விதிகள் மற்றும் மெட்ரிக் குலேஷன் பள்ளி ஒழுங்குமுறை விதிகளை, அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

உரிய திருத்தங்களை மூன்று மாதங்களில் மேற்கொள்ள வேண்டும். மாணவர்கள் சேர்க்கையின் போது, மாற்றுச் சான்றிதழ் அளிக்கும்படி வற்புறுத்தக் கூடாது" என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

high court order no ask tc for joining school


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->