இந்திய ஒன்றியத்தில் தமிழ் தான் தமிழர்களின் அதிகாரம் - வைரமுத்து பேச்சு.!
hindi language againt strike vairamuthu speech
தமிழகத்தில் மத்திய அரசு இந்தியைத் திணிப்பதாகக் கூறி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தமிழ் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ் அறிஞர்கள், தமிழ் படைப்பாளர்கள் மற்றும் சென்னை மாவட்ட அனைத்து இலக்கிய அமைப்பாளர்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
இப்போராட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய வைரமுத்து தெரிவித்ததாவது, “தமிழ் மொழிக்கு உரிய மரியாதை அளிக்கப்படும் என்று சொல்லிவிட்டு மத்திய அரசு மீண்டும் இந்தியைத் திணிக்கிறது.
இதற்காக தமிழர்கள் விழித்துக்கொள்ள வேண்டும். கவியரசு கண்ணதாசனால் கொண்டாடப்பட்ட மொழி நம் மொழி தமிழ் மொழி. அப்படிப்பட்ட இந்த மொழியை சாஸ்திரத்தாலும் அழிக்க முடியாது, சட்டத்தாலும் அழிக்க முடியாது. இதற்கு முன்பும் இந்தித் திணிப்பு வந்திருக்கிறது. இந்தி எதிர்ப்பும் நடந்திருக்கிறது.
அந்த இந்தி மொழி திணிப்பெல்லாம் கொசு கடிப்பதைப் போல அதை நசுக்குவது நம் கண்ணுக்கு தெரியும். ஆனால், இப்போது திணிக்கப்படும் இந்தி மொழி வேறு வடிவம் கொண்டிருக்கிறது. ஆட்டிற்கு பூச்சூட்டி பொட்டு வைத்து அந்த ஆட்டின் மேல் மஞ்சள் நீர் தெளிப்பது போன்று. அந்த ஆடு நின்று கொண்டிருக்கிறது. கத்தியும் தயாராக இருக்கிறது. எனவே தமிழர்களே விழித்துக்கொள்ளுங்கள்.
தமிழ்நாட்டில் இந்தியை நுழைய விட்டால் என்ன ஆகும் தெரியுமா? முந்திரி மூட்டையில் வண்டுகளை நுழையவிட்டால் முந்திரியை அழித்துவிடும் அதேபோல் தான். நேற்று பிறந்தது இந்தி மொழிக்காக ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பிறந்த தமிழ் மொழியை எப்படி புறந்தள்ளுவீர்கள். இந்தி மொழி மீது எங்களுக்கு வெறுப்பு இல்லை. அந்த மொழியையும் நாங்கள் மதிக்கிறோம். அதைத் திணிக்காதீர்கள். இந்திய ஒன்றியத்தில் தமிழ் தான் தமிழர்களின் அதிகாரம்” என்று தெரிவித்துள்ளார்.
English Summary
hindi language againt strike vairamuthu speech