கியாஸ் வெடித்து இடிந்து விழுந்த மேற்கூரை - போலீஸார் விசாரணை.!
house roof collapse for gas explossion in chennai keezhpakkam
சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள பம்பிங் ஸ்டேஷன் குட்டியப்பன் தெருவைச் சேர்ந்தவர் தனசேகர். எலக்ட்ரீசியனாக பணிபுரிந்து வரும் இவரது வீட்டில் இருந்த பிரிட்ஜில் நேற்று இரவு மின்கசிவு ஏற்பட்டு திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கியது.
அதில், தனசேகர் வீட்டில் வைத்திருந்த காப்பர் ஒயர்களும் தீப்பிடித்து எரிந்தன. இதையடுத்து தீ மளமளவென வீடு முழுவதும் பரவி புகை சூழ்ந்ததால் தனசேகரன் வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தார்.
இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் சம்பவம் குறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். அந்தத் தகவலின் படி விரைந்து வந்த வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, திடீரென சமையலறையில் இருந்த கியாஸ் சிலிண்டர் வெடித்து சிதறியது. இதில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததால் பொதுமக்கள் பெரும் அச்சத்திற்கு ஆளாகினர். இதற்கிடையே சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த போலீஸார் அப்பகுதி மக்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
பின்னர் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீவிபத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றாலும், வீட்டில் இருந்த டிவி, வாஷிங்மிஷின், பிரிட்ஜ் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் எரிந்து சாம்பலாயின.
இந்த தீவிபத்து குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இரவு நேரத்தில் வீட்டில் தீவிபத்து ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
house roof collapse for gas explossion in chennai keezhpakkam