ஈஷா அறக்கட்டளை கட்டிட விவகாரம்...தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு சரமாரி கேள்வி!
Isha Foundation building controversy Supreme Court questions Tamil Nadu govt
சுற்றுச்சூழல் அனுமதியின்றி கட்டிடங்கள் கட்டிய விவகாரத்தில் ஈஷா அறக்கட்டளைக்கு எதிராக தாமதமாக மேல்முறையீடு செய்தது ஏன் என்று தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.
சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல் விதிகளை மீறி கட்டிடங்கள் கட்டியதற்காக விளக்கம் கேட்டு கோவை ஈஷா அறக்கட்டளைக்கு, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் கடந்த 2021-ம் ஆண்டு நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இதையடுத்து இந்த நோட்டீசுக்கு தடை விதிக்கக்கோரி ஈஷா அறக்கட்டளை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, அந்த நோட்டீசை ரத்து செய்தது. மேலும் இதை எதிர்த்து தாக்கல் செய்த தமிழ்நாடு அரசின் மேல் முறையீட்டு மனுவை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் சூர்யகாந்த், என்.கே.சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று விசாரணைக்கு எடுத்து கொண்டது.
அப்போது, 2 ஆண்டுகள் கழித்து தாமதமாக மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டதன் நோக்கம் சந்தேகத்தை எழுப்புவதாக நீதிபதிகள் தெரிவித்ததனர் , மேலும் குறித்த காலத்துக்குள் மேல்முறையீடு செய்வதை யார் தடுத்தது? என சரமாரி கேள்விகளை எழுப்பினர்.அப்போது இதற்கு பதில் அளித்த தமிழ்நாடு அரசின் தலைமை வக்கீல் பி.எஸ்.ராமன், இந்த விவகாரத்தில் இருதுறைகள் விவாதிக்க நேரம் எடுத்துக் கொண்டன என கூறினார்.
அதேபோல ஈஷா மையத்தின் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் முகுல் ரோத்தகி, சிவராத்திரி விழாவையொட்டி விசாரணையை தள்ளிவைக்க வேண்டும் என வாதிட்டார். இதையடுத்து தமிழக அரசின் சார்பில் ஆஜரான மற்றொரு மூத்த வக்கீல் வி.கிரி, இந்த விவகாரத்தில் பிரமாண பத்திரத்தை சீர்படுத்தி தாக்கல் செய்யும் வகையில் 2 வாரங்களுக்கு தள்ளி வைக்கவேண்டும் என அவகாசம் கேட்டார். அப்போது இதற்கு தேவையில்லை என தெரிவித்த நீதிபதிகள், விசாரணையை வரும் 28-ந்தேதிக்கு தள்ளிவைத்தனர்.
English Summary
Isha Foundation building controversy Supreme Court questions Tamil Nadu govt