கதிர் ஆனந்த் எம்.பி.யிடம் 10 மணி நேரம் விசாரணை.. தேர்தல் தொடர்பாக அடுக்கடுக்கான கேள்வி கேட்ட அமலாக்கத்துறை!
Kathir Anand MP questioned for 10 hours Enforcement Directorate asks a series of questions about elections
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தொடர்பான கேள்விகளை அமலாக்கத்துறை அதிகாரிகள் கேட்டதாக தி.மு.க. எம்.பி. கதிர் ஆனந்த் தெரிவித்தார்.
கடந்த 2019 ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின்போது வேலூர் தொகுதியில் போட்டியிட்ட அமைச்சர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்க முயன்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து அதன்பேரில் துரைமுருகனின் வீடு, கதிர் ஆனந்துக்கு சொந்தமான கல்லூரி போன்ற இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அப்போது சோதனை நடத்தினார்கள்.மேலும் துரைமுருகனின் நெருங்கிய கட்சி பிரமுகர் பூஞ்சோலை சீனிவாசனின் வீடு மற்றும் அவரது உறவினருக்குச் சொந்தமான சிமெண்ட் குடோன் உள்ளிட்ட 6 இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது
இந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.11 கோடியே 51 லட்சம் பணம் சிக்கியதாக வருமான வரித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டதைத்தொடர்ந்து வேலூர் தொகுதிக்கு மட்டும் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. பின்னர் மீண்டும் நடத்தப்பட்ட தேர்தலில் கதிர் ஆனந்த் வெற்றி பெற்று எம்.பி. ஆனார்.
இந்த சூழலில் காட்பாடி போலீஸ் நிலையத்தில் கதிர் ஆனந்த், பூஞ்சோலை சீனிவாசன் உள்ளிட்டோர் மீது வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் அமலாக்கத்துறையும் கதிர் ஆனந்துக்கு சொந்தமான என்ஜினீயரிங் கல்லூரி, பூஞ்சோலை சீனிவாசன் மற்றும் அவரது உறவினர்கள் வீடு உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் 2 நாட்கள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது சுமார் ரூ.14 கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்களும், ரூ.75 லட்சம் ரொக்க பணமும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியானது.
இந்தநிலையில் கதிர் ஆனந்த் எம்.பி.யை விசாரணைக்கு நேற்று (22-01-2025) ஆஜராக வேண்டும் என்று ஏற்கனவே அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருந்தது.அதன்படி சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் தி.மு.க. எம்.பி. கதிர் ஆனந்த் நேற்று ஆஜரானார். அப்போது அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் சுமார் 10 மணி நேரம் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் தி.மு.க. எம்.பி. கதிர் ஆனந்த்திடம் அடுக்கடுக்கான கேள்விகளை அதிகாரிகள் முன்வைத்ததாகவும், அந்த கேள்விகள் அனைத்திற்கும் கதிர் ஆனந்த் எம்.பி. பதில் அளித்ததாகவும் கூறப்படுகிறது. ஆனாலும் விசாரணையின் முழுமையான விவரங்களை அமலாக்கத்துறை வெளியிடவில்லை.
English Summary
Kathir Anand MP questioned for 10 hours Enforcement Directorate asks a series of questions about elections