கொல்கத்தா பெண் மருத்துவருக்கு நடந்த கொடுமை எங்கு வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும் நடக்கலாம் - சென்னை மாணவிகள் பேட்டி!
Kolkata RGKar Doctor death Chennai RajivGandhi medical student protest
மேற்கு வங்கத்தில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு நீதி கேட்டு, நாடு முழுவதும் இன்று 24 மணிநேர வேலை நிறுத்தத்தில் மருத்துவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்று காலை தொடங்கி நாளை (ஆக.18 ) காலை 6 மணி வரை 24 மணி நேர வேலை நிறுத்த போராட்டத்தில் மருத்துவர்கள் ஈடுபட உள்ளனர்.
இந்நிலையில், ராஜீவ் காந்தி பொது மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர்களாக உள்ள சென்னை மருத்துவக் கல்லூரி மாணவர்கள் செய்தியாளர்களை சந்தித்து தெரிவிக்கையில்,
"பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட கொல்கத்தா பெண் மருத்துவர் எவ்வளவு கனவுகளுடன் இருந்திருப்பார். அந்த பெண்ணுக்கு நடந்த கொடுமை எங்கு வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும் நடக்கலாம்.
அவசர சிகிச்சை பிரிவுக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் புறநோயாளி பிரிவு மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது இந்தியாவில் நடந்த மிகப்பெரிய குற்றாமாக பார்க்க வேண்டும்.
24 மணி நேரமும் மக்கள் வந்து செல்லும் மருத்துவமனையில் இவ்வளவு பெரிய கொடுமை நடந்துள்ளது. எங்கள் தனிப்பட்ட பணிகளை தாண்டி 24 மணி நேரமும் வேலை செய்யும் மருத்துவர்களுக்கு பாதுகாப்பு இல்லை” என்று தெரிவித்தனர்.
இதற்கிடையே, பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், கொல்கத்தாவில் ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 9-ஆம் தேதி பணியில் இருந்த முதுநிலை மருத்துவ மாணவி சிலரால் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டதும், அதைத் தொடர்ந்து அங்கு இரு நாட்களுக்கு முன் நிகழ்ந்த வன்முறைகளும் அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கின்றன. மனிதத் தன்மையற்ற மிருகத்தனமான இந்த செயல்கள் மன்னிக்க முடியாதவை.
அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் பணியாற்றும் மருத்துவர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்; வாய்ப்பிருந்தால் அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் தனி காவல் நிலையம் அமைக்க வேண்டும்.
பட்ட மேற்படிப்பு மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரித்து, அவர்களுக்கான பணி நேரத்தை இயன்ற அளவுக்கு குறைக்கவும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
English Summary
Kolkata RGKar Doctor death Chennai RajivGandhi medical student protest