யாரும் சுயநினைவில் இல்லை..கண்ணுதிறக்க முடியல! அனைத்திற்கும் 2 திமுக நிர்வாகிகள் காரணம் - பாமக பாலு!!
Lawyer Balu press meet on fake liquor issue
கள்ளக்குறிச்சி மாவட்டம் கலாச்சாராய விவகாரத்தில் இந்த மாவட்ட பொறுப்பு அமைச்சர் எ.வ வேலு மற்றும் மதுவிலக்கு துறை அமைச்சரை அமைச்சர் பதவியில் இருந்து முதல்வர் நீக்க வேண்டும் என பாமக பாலு கூறியுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அதிகம் மெத்தனால் கலக்கப்பட்ட கள்ளச்சாராயத்தை குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 38 ஆக உயர்ந்துள்ளது. கள்ளக்குறிச்சி கள்ள சாராய சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஆலோசனைப்படி, கள்ளச்சாராயம் குடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை பாமக சார்பில் பாமக வழக்கறிஞர் பாலு சந்தித்து மருத்துவமனையில் ஆய்வு நடத்தினார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த வழக்கறிஞர் பாலு பேசுகையில்,
கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளச்சாராயம் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளி கண்ணுகுட்டி கோவிந்தராஜ் திமுகவை சேர்ந்தவர். அவருக்கு துணையாக இருந்து கண்ணுகுட்டி கள்ளச்சாராய விற்பனை வழக்கில் கைது செய்யும் போதெல்லாம் காவல் துறையினரை மிரட்டி வெளியே எடுத்தவர் திமுக பொறுப்பாளர் வசந்தம் கார்த்திகேயன் இவர்கள் இரண்டு பேரும் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கள்ளச்சாராயம் குடித்து உயிர் இழந்த குடும்பத்திற்கு தமிழக அரசு ரூ.10 லட்சம் ரூபாய் நிவாரணமாக அறிவித்துள்ளது. அது போதாது ரூ.25 லட்ச ரூபாய் வழங்க வேண்டும் எனவும் உயிரிழந்தவரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் எனவும் கூறினார்.
தொடர்ந்து செய்தியாளிடம் பேசிய வழக்கறிஞர் பாலு, கள்ளச்சாராயம் விற்பனைக்கு முக்கிய காரணம் திமுக பொறுப்பாளர்கள்தான். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களில் பலர் சுய நினைவில் இல்லை. அவர்களால் கண்ணை திறக்க முடியவில்லை. கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களில் பலர் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர்கள்.
கள்ளச்சாராயம் விவகாரத்தில் தமிழக முதலமைச்சர் தார்மீக பொறுப்பேற்று கொண்டு மன்னிப்பு கோர வேண்டும். இந்த மாவட்டத்தின் திமுக பொறுப்பாளர்களான அமைச்சர் எவ.வேலு மற்றும் மதுவிலக்கு துறை அமைச்சர் இருவரையும் அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று கூறினார்.
English Summary
Lawyer Balu press meet on fake liquor issue