கேஸ் சிலிண்டருக்கு இனி தட்டுப்பாடு..? எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் காலவரையற்ற வேலை நிறுத்தம்..!
LPG Tanker Truck Owners Association Indefinite strike
தென் மண்டல எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் நாளை வியாழக்கிழமை (மார்ச் 27) முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக, நாமக்கல்லில் அந்த சங்கத்தின் தலைவர் கே. சுந்தரராஜன் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
இந்தியன் ஆயில் நிறுவனம், பாரத் பெட்ரோலியம் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்கள், தமிழகம், கேரளம், தெலங்கானா, கர்நாடகம், ஆந்திரா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் உள்ள சுமார் 4,000 லாரிகளை துறைமுகத்திலிருந்து எரிவாயு பாட்டிலிங் பிளான்டுக்கு டேங்கர்களில் எரிவாயுவை எடுத்துவரும் பணியை மேற்கொண்டு வருகின்றன.

2025-30-ஆம் ஆண்டுக்கான புதிய ஒப்பந்த விதிகளை எண்ணெய் நிறுவனங்கள் அண்மையில் வெளியிட்டன. இதில் இரண்டு அச்சு லாரிகளை பயன்படுத்தக் கூடாது, மூன்று அச்சு லாரிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். மாற்று ஓட்டுநர் இல்லாத பட்சத்தில் ரூ.20 ஆயிரம் அபராதம் உள்பட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இந்த விதிமுறைகளால் டேங்கர் லாரிகளை இயக்கமுடியாத நிலைக்கு லாரி உரிமையாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளார். அத்துடன் அவர் பேசுகையில், மூன்று கட்டங்களாக எண்ணெய் நிறுவனங்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை என்றும், அதனால், தென் மண்டல அளவில் வியாழக்கிழமை (நாளை) முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம் என்று தெரிவித்துள்ளார். இதன் மூலம் 6 மாநிலங்களில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், தென் மண்டலம் மட்டுமின்றி நாடு முழுவதும் உள்ள டேங்கர் லாரிகள் இந்த போராட்டத்தில் ஈடுபட முன்வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன், வருவாய் இழப்பைக் காட்டிலும் வேலை வாய்ப்பு பறிபோகக் கூடாது என்ற எண்ணத்திலேயே இந்தப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளோம் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், எண்ணெய் நிறுவனங்கள் தாமாக முன்வந்து பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் வரை வேலைநிறுத்த போராட்டம் தொடரும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த போராட்டம் தொடர்ந்தால் வீட்டில் பயன்படுத்தப்படும் எல்.பி.ஜி கேஸ் சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளது.
English Summary
LPG Tanker Truck Owners Association Indefinite strike