புதுக்கோட்டையில் அரங்கேறிய கொடூரம்.. குடிநீரில் மலம் கலப்பு.. உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி..!!
MaduraiHC ordered to submit report of pudukkottai untouchability
புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த சண்முகம் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் புதுக்கோட்டை மாவட்டத்தை அடுத்த வேங்கைவயலில் குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்டதால் அந்த தண்ணீரை குடித்த குழந்தைகளுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதைத்தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அப்பகுதியில் ஆய்வு செய்த பொழுது அப்பகுதியில் இரட்டைக் குவளை முறை வழக்கத்தில் இருந்தது தெரிய வந்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பல கிராமங்களில் இன்றளவும் இரட்டை குவளை முறை நடைமுறையில் இருந்து வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்ய குழு அமைத்து நடவடிக்கை எடுக்கவும், புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் மனித கழிவு கலக்கப்பட்ட சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 30க்கும் மேற்பட்ட குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் அவசர வழக்காக மனு தாக்கல் செய்தார்.
இந்த அவசரம் மனுவை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் வேல்முருகன் மற்றும் விஜயகுமார் அமர்வு வழக்கின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என கேள்வி எழுப்பினர். இதனை அடுத்து அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் "குடிநீர் தொட்டியில் மலம் கலந்தது, இரட்டை குவளை முறை, கோயிலில் அனுமதிக்காதது என்பதற்காக மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோயிலில் அனுமதிக்காதது மற்றும் இரட்டை குவளை தொடர்பாக இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதேபோன்று குடிநீர் தொட்டியில் மலம் கலந்தது தொடர்பாக அடையாளம் தெரியாத நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். இது தொடர்பாக சந்தேகிக்கும் நபர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது" என அரசு தரப்பு வழக்கறிஞர் பதில் அளித்தார்.
இதனைக் கேட்ட நீதிபதிகள் இந்த பிரச்சனை அதி முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால் இந்த வழக்கு குறித்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர், புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட மனித உரிமைகள் மற்றும் சமூக நீதி பிரிவு துணை ஆணையர் ஆகியோர் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து நிலை அறிக்கைகள் தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டு இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை ஜனவரி 5ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
English Summary
MaduraiHC ordered to submit report of pudukkottai untouchability