திருவண்ணாமலை || குடும்பத் தகராறு - மனைவியை கொன்று துண்டு துண்டுகளாக வெட்டி காட்டு பகுதியில் வீசிய கொடூர கணவர்.!
man arrested for kill wife in thiruvannamalai
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கோபுரத்தெரு பகுதியை சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுனர் கோபி. இவருக்கு திருமணமாகி அவரது மனைவி கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்றதாக கூறப்படுகிறது. அதனால் இவர் திருவண்ணாமலை அரசுடையான்பட்டு பகுதியை சேர்ந்த வெங்கடேசன் என்பவரது மகள் சரண்யா என்பவரை 2-வதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகள், இரண்டு மகன்கள் உள்ளனர்.
ஆனால், கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அதன் படி தீபாவளிக்கு முந்தைய நாள் மீண்டும் தம்பதிகளுக்கு இடையே தகராறு ஏற்பட்டதையடுத்து சரண்யா மாயமானார். குழந்தைகள் தாய் குறித்து கோபியிடம் கேட்ட போது சரண்யா கோபித்து கொண்டு அரசுடையான்பட்டுக்கு சென்று விட்டதாக கூறியுள்ளார்.
இந்த நிலையில், கடந்த 4 நாட்களுக்கு முன்பு சரண்யாவை காணவில்லை என்று கோபி தரப்பினர் திருவண்ணாமலை மாநகர காவல் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் சரண்யாவின் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினர். இதனால், அதிர்ச்சி அடைந்த சரண்யாவின் குடும்பத்தினர் திருவண்ணாமலைக்கு வந்து குழந்தைகளிடம் இது குறித்து கேட்ட போது அம்மா உங்கள் வீட்டிற்கு தான் சென்று உள்ளதாக அப்பா தெரிவித்ததாக கூறியுள்ளனர்.
இதைக்கேட்டு சந்தேகமடைந்த சரண்யாவின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் கோபியிடம் விசாரணை நடத்த அவரது வீட்டிற்கு சென்றனர். போலீசார் வருவதை கண்டதும் அவர் தப்பித்துச் சென்று விட்டார். மேலும் வீட்டில் இருந்த கோபியின் தாய் சிவகாமியிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
முதலில் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்த அவர் பின்னர் சரண்யாவை கொலை செய்து துண்டு, துண்டாக வெட்டி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சூளகிரி காட்டு பகுதியில் வீசியதாக தெரிவித்தார். இதையடுத்து, போலீசார் தீவிரமாக தேடி, தலைமறைவாக இருந்த கோபியை கைது செய்தனர்.
இதைத் தொடர்ந்து போலீசார் சரண்யாவின் பெற்றோரை அழைத்து கொண்டு உடல் வீசப்பட்ட இடத்திற்கு சென்றனர். அங்கு சரண்யாவின் உடல் 8 துண்டுகளாக வெட்டப்பட்டு கவரில் கட்டப்பட்ட நிலையில் கிடந்தது. அதிலும் தலை உள்ளிட்ட ஒரு சில உடல்பாகங்கள் மட்டுமே கிடைத்துள்ளது. இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் திருவண்ணாமலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
man arrested for kill wife in thiruvannamalai