நடுத்தர மக்களுக்கு குட் நியூஸ்.."வீட்டு மனைகள் வாங்க வங்கி கடன்".. கூட்டுறவுத்துறை அமைச்சரின் மாஸ் அறிவிப்பு..!!
Minister announced Cooperative Banks will provide loan for land
தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடரின் கூட்டுறவுத்துறை மானிய கோரிக்கையின் பொழுது அத்துறையின் அமைச்சர் பெரியகருப்பன் முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். கூட்டுறவு வங்கிகள் மூலமாக அங்கீகரிக்கப்பட்ட வீட்டு மனைகளை வாங்க புதிய கடன் திட்டம் அறிமுகப்படுத்தப்படும், மற்ற வங்கிகளை விட குறைந்த வட்டி விகிதத்தில் கூட்டுறவு வங்கிகளின் கடன் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
மேலும் கூட்டுறவு சங்கங்களின் வசூல் ஆகாமல் நிலுவையில் உள்ள தவணை தவறிய பண்ணை சாரா கடன்கள் மற்றும் இதர நீண்ட கால நிலுவை இனங்களுக்கு சிறப்பு கடன் தீர்வு திட்டம் 2023-2024 ஆம் ஆண்டு செயல்படுத்தப்படும்.
நாட்டுப்புற கலைஞர்கள், பாரம்பரிய இசை கருவி மற்றும் பாரம்பரிய கலைப் பொருட்கள் தயாரிக்கும் பணியில் உள்ளவர்களுக்கு கூட்டுறவு வங்கிகள் மூலம் சிறப்பு கடன் உதவி வழங்கப்படும்.
கூட்டுறவு வங்கிகள் மூலம் மூத்த குடிமக்களுக்கு மறு அடமான கடன் வழங்கப்படும். ஊதியம் பெறும் பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு வாகனம் வீடு உபயோக பொருட்கள் வாங்க கடன் வழங்கப்படும்.
கூட்டுறவு வங்கிகளில் கடன் பெறும் உறுப்பினர்களின் வயது உச்சவரம்பு 60லிருந்து 70ஆக உயர்த்தப்படும். மத்திய கூட்டுறவு வங்கி உதவி பொது மேலாளருக்கு பொதுப்பணி நிலைத்திறன் நடைமுறைப்படுத்தப்படும்.
தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் செயலாளர்கள் பணியிடத்திற்கான நுழைவு பணியிடங்களில் பொதுப்பணி நிலைத்திறன் கொண்டுவரப்படும்.
தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி 5 புதிய கிளைகள் தொடங்கப்படும். கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் 1500 நியாய விலை கடைகள் புதுப்பிக்கப்படும். தமிழகத்தில் உள்ள 5000 நியாய விலை கடைகளுக்கு உலகத் தரச் சான்றிதழ் பெறப்படும். திருவள்ளூர் மாவட்டம் திரூரில் கூட்டுறவு அருங்காட்சியகம் அமைக்கப்படும்.
2000 தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் பல்நோக்கு சேவை மையங்களாக மாற்றப்படும். புதுக்கோட்டை மற்றும் சேலம் மாவட்டங்களில் இரண்டு புதிய வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கங்கள் உருவாக்கப்படும் உள்ளிட்ட அறிவிப்புகளை கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியகருப்பன் வெளியிட்டுள்ளார்.
English Summary
Minister announced Cooperative Banks will provide loan for land