என்ன தொடர்பு?! அவரு அண்ணேங்குவாரு, நான் வாழ்த்துவேன்! அவ்வளவு தான் - அமைச்சர் செஞ்சி மஸ்தான் விளக்கம்!
Minister Masthan say about Maruvur Raja
விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் கள்ளச்சாராயம் என்ற விஷச்சாராயம் அருந்தி 22 பேர் பலியாகிய சம்பவம் தொடர்பாக, இதுவரை சுமார் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதில், முக்கியமாக திமுக அமைச்சர் மஸ்தானுக்கு நெருங்கியவரும், திமுக கவுன்சிலரின் கணவருமான மருவூர் ராஜா குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
கள்ளச்சாராய வியாபாரி மருவூர் ராஜாவுடன் அமைச்சர் மஸ்தான் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி, கடும் விமர்சனங்களுக்கு ஆளாக்கியது.
மேலும், கள்ளச்சாராய வியாபாரியுடன் அமைச்சருக்கு என்ன தொடர்பு? என்று பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பியிருந்தனர்.
இந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செஞ்சி மஸ்தானிடம் இது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த அமைச்சர், "குற்றம் செய்தவர் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
முதலமைச்சர் ஏற்கனவே தெரிவித்துள்ளார், தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். எந்த பாரபட்சமும் இதில் இருக்காது என்று தெரிவித்துள்ளார்.
என்னுடன் அவர் புகைப்படம் எடுத்தது குறித்து, (சிறு புன்னகையுடன்) யார் வேண்டுமானாலும் என்னுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம்.
எதார்த்தமாக வருவார்கள், என்னுடன் புகைப்படம் எடுத்துக் கொள்கிறார்கள். நான் பொதுவாழ்வில் இருக்கிறேன். அண்ணே இன்று எனக்கு பிறந்தநாள் என்று ஒருவர் வருவார், அண்ணே ஒருவர் திருமண நாள் எனக்கு என்று வருவார், அவர்களை நாங்கள் வாழ்த்துவோம். புகைப்படம் எடுத்துக் கொள்வோம். அது போன்ற புகைப்படம் தானே தவிர, வேறொன்றும் இல்லை" என்று அமைச்சர் தெரிவித்தார்.
English Summary
Minister Masthan say about Maruvur Raja