"தமிழகத்தில் அரிசி கடத்தலே இல்லை" என்ற நிலை உருவாக வேண்டும் - அமைச்சர் சக்கரபாணி..!
minister sakkarabaani statement
தமிழக உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளதாவது:
"தமிழகத்தில் உள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் தரமான அரிசி கிடைக்கிறது என்று பொதுமக்களும் மாற்றுக் கட்சியினரும் பாராட்டுகின்ற நிலை ஏற்பட்டுள்ளது. ரேஷன் அரிசி கடத்தல் தடுப்பு நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டதன் காரணமாக மூன்று மடங்கு அளவிற்கு ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டதோடு அதிகமான வழக்குகளும் பதியப்பட்டுள்ளன.
இதையடுத்து, அரிசி ஆலைகளில் திடீர் சோதனை மேற்கொண்டு அரிசி கடத்தலுக்குத் துணை போன ஆலைகளின் உரிமம் ரத்து செய்யப்பட்டதோடு அவர்கள் மீது வழக்கும் பதிவும் செய்யப்பட்டுள்ளது. அரிசிக் கடத்தல் எவ்வாறு நடைபெறுகிறது என்பதை ஆய்வு செய்து, கடத்தலுக்கு முன்பாகவே அதை நிறுத்தும் வண்ணம் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
அதுமட்டுமின்றி, வழக்கமாக அரிசி கடத்தலில் ஈடுபடும் நபர்களைக் கண்டறிந்து, அவர்களின் மறுவாழ்வுக்கு வழி செய்தும், அவர்களைக் கடத்தலில் ஈடுபடுத்தாமல் நல்வழிப்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன், பயனாளிகள் மட்டுமே ரேஷன் அரிசி பெறுவதை உறுதி செய்திட வேண்டும் என்றும், ரேசன் அரிசியை வாங்கி தாங்கள் பயன்படுத்தாமல் வெளியில் விற்பனை செய்பவர்கள் யார் என்பதைக் கடைகள் வாரியாகக் கண்டறிந்து அவர்களை எச்சரிக்க வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
இதைத்தொடர்ந்து, பொது விநியோகத் திட்டப் பணிகளில் ஈடுபட்டுள்ள அனைவரும் ஒத்துழைப்பு தந்தால் தான் அரிசிக் கடத்தலை அறவே தடுக்க முடியும். அரசி கடத்தல் தொடர்பாக அரசுக்கு தகவல் தெரிவிக்க விரும்புபவர்கள் கட்டணமில்லாத் தொலைபேசி எண்கள் 1967 மற்றும் 1800-425-5901 வழியாகவும் தெரியப்படுத்தலாம்.
இதையடுத்து, பொதுமக்களுக்குத் தரமான அரிசியை வழங்க வேண்டும் என்ற அரசின் எண்ணத்தையும் கருத்தில் கொண்டு, கடத்தலில் வாடிக்கையாக ஈடுபட்டுள்ளோர் தங்கள் செயலை நிறுத்திக் கொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் அரிசிக் கடத்தலே இல்லை என்ற நிலையை உருவாக்கிட வேண்டும் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன்" என்று அந்த அறிக்கையில் அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
English Summary
minister sakkarabaani statement