அண்ணாமலை சரியான முறையில் அப்டேட் ஆகவில்லை - பரப்பரப்பைக் கிளப்பிய அமைச்சர் சிவசங்கர்.!
minister sivasangar press meet in cuddalore court
கடலூர் மாவட்டத்தில் உள்ள நெய்வாசல் கிராம வெள்ளாற்றில், கடந்த 2015-ம் ஆண்டு அ.தி.மு.க.ஆட்சியில் அரசு மணல் குவாரி செயல்பட்டு வந்தது. இதனால், தங்கள் பகுதியில் நீர் ஆதாரம் பாதிப்பதாக குவாரியை மூடக்கோரி, ஆற்றின் மறுகரையில் உள்ள அரியலூர் மாவட்டம், சன்னாசி நல்லூர் கிராம மக்களுடன் அப்போதைய குன்னம் தி.மு.க. எம்.எல்.ஏ வாக இருந்து வந்த சிவசங்கர் தலைமையில், முற்றுகைப் போராட்டம் அறிவிக்கப்பட்டு கிராம மக்கள் தடையை மீறி குவாரிக்குள் நுழைந்து அங்கிருந்த வாகனங்களைத் சேதப்படுத்தியதால் போலீசார் தடியடி நடத்தினர்.
இந்தச் சம்பவத்தில் தற்போதைய போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் உட்பட பலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு கடலூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், இந்த வழக்கு விசாரணை தொடர்பாக போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் இன்று காலை கடலூர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.
அப்போது, இந்த வழக்கு விசாரணை வருகிற 22-ந்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து வெளியில் வந்த போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:- "தமிழகத்தில் தாழ்தள பேருந்துகள் இயக்காமல் மாற்றுத்திறனாளிகளுக்கு பாதிப்பு இருந்ததாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தனர்.
இந்த நிலையில் முதற்கட்டமாக முதலமைச்சர் உத்தரவின் பேரில் மாற்றுத்திறனாளிகளுக்காக தாழ்த்தள பேருந்தை சென்னை மாநகராட்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். அடுத்த கட்டமாக கோயம்புத்தூர் மற்றும் மதுரை உள்ளிட்ட பகுதிகளுக்கு இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இதனைத் தொடர்ந்து பிற பகுதிகளுக்கு தாழ்தள பேருந்து இயக்க வேண்டுமானால் அந்த பகுதிகளில் உள்ள சாலையை ஆய்வு செய்து படிப்படியாக இயக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். போக்குவரத்து ஊழியர்களின் ஊதியம் தொடர்பாக இந்த மாதம் கடைசியில் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் போக்குவரத்து ஊழியர்களுக்கு பணப்பலன் கிடைக்கவில்லை. ஆனால் தி.மு.க.ஆட்சி வந்த பிறகு முதலமைச்சர் உத்தரவின் பேரின் முதற்கட்டமாக 1850 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் அடுத்த கட்டமாக நிதி வழங்க நிதிதுறையிடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் மாணவர்கள் பாதுகாப்பாக பேருந்தில் பயணம் மேற்கொள்வதற்கு போக்குவரத்து துறை மற்றும் வட்டார போக்குவரத்து சார்பில் அதிகாரிகள் அந்தந்த பள்ளிகளுக்கு நேரில் சென்று உரிய முறையில் அறிவுரை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
வருங்காலங்களில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஜெய்ஸ்ரீராம் சொல்லுவார். அமைச்சர்களும் ஜெய் ஸ்ரீ ராம் என்று சொல்ல ஆரம்பித்து விடுவார்கள் என்று அண்ணாமலை தெரிவித்து இருந்தார். அண்ணாமலை சரியான முறையில் அப்டேட் ஆகவில்லை. ஏனென்றால் பிரதமர் நரேந்திர மோடி ராமரை கைவிட்டு விட்டார். அதற்கு மாறாக தற்போது ஜெய் ஜெகநாத் என்பவரை கைபிடித்துள்ளார்.
பதவி ஏற்பதற்கு முன்பு பிரதமர் உள்ளிட்ட அனைவரும் ஜெய் ஸ்ரீ ராம் என்று கூறினார்கள். தற்போது பதவி ஏற்புக்கு பிறகு பிரதமர் மோடி ஜெய் ஸ்ரீ ராமை விட்டுவிட்டு ஜெய் ஜெகநாத் என்று முழக்கம் ஏற்படுத்தி கட்சி தாவி விட்டார். ஆகையால் அண்ணாமலை சரியான முறையில் அப்டேட் ஆன பிறகு அதற்கான பதில் தெரிவிக்கிறோம்" என்று பரபரப்பாக பேசியுள்ளார்.
English Summary
minister sivasangar press meet in cuddalore court