தமிழ்நாட்டை பெருமைப்படுத்துங்கள் - மாணவர்களுக்கு ஸ்டாலின் வேண்டுகோள்.!
mk stalin request to students for make tamilnadu proud in chennai nehru stadium
நேற்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில், தமிழ்நாடு அரசு பள்ளிகளில் ரூ.455 கோடியே 32 லட்சம் மதிப்பில் 22 ஆயிரத்து 931 திறன்மிகு வகுப்பறைகள் தொடக்க விழா, எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 பொதுத் தேர்வில் தமிழ் பாடத்தில் 100-க்கு 100 மதிப்பெண் பெற்ற 43 மாணவ-மாணவிகளை பாராட்டும் விழா, 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற 1,728 அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களை பாராட்டும் விழா, 67-வது தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் 409 பதக்கங்களை வென்ற மாணவ-மாணவிகளை பாராட்டும் விழா, தொடக்கக் கல்வியில் பணிபுரியும் 79 ஆயிரத்து 723 ஆசிரியர்களுக்கு ரூ.101 கோடியே 48 லட்சம் மதிப்பில் கையடக்க கணினி வழங்கும் விழா என்று ஐம்பெரும் விழாவை பள்ளிக்கல்வித் துறை நடத்தியது.
இந்த விழாவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:- "மாணவர்களுக்காக நம்முடைய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. 16 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் காலை உணவுத் திட்டம், 27 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் இல்லம் தேடி கல்வித்திட்டம், 28 லட்சம் மாணவர்களுக்கு திறன் பயிற்சி வழங்கி வரும் நான் முதல்வன், 23 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் எண்ணும் எழுத்தும் திட்டம், 23 லட்சம் பெற்றோரை உள்ளடக்கிய பள்ளி மேலாண்மைக் குழுக்கள், நம்ம ஸ்கூல்-நம்ம ஊரு பள்ளி திட்டம், வானவில் மன்றம் இப்படி நிறைய இருக்கிறது.
அதிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்குகிற முக்கியமான திட்டம், புதுமைப் பெண் திட்டம். பலரும் இந்த திட்டத்தை பாராட்டினார்கள். மாணவிகள் தங்களின் தேவைக்கு இந்த தொகை உதவியாக இருப்பதாக மிகுந்த மகிழ்ச்சியுடன் கூறினார்கள். அந்த மகிழ்ச்சி மாணவர்கள் முகத்திலும் ஏற்பட வேண்டும் என்பதற்காக உயர் கல்வி செல்லும் அரசுப் பள்ளியில் படித்த மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் தமிழ்ப்புதல்வன் திட்டம் செயல்படுத்தப்படும் என்று சொல்லியிருந்தேன். நீங்கள் கல்லூரி சென்றவுடனே வருகிற ஆகஸ்டு மாதத்தில் இருந்து அந்த 1,000 ரூபாய் வழங்கப்படும்.
என்னுடைய ஆசையெல்லாம் உலகத்தில் எந்த ஊர் மாணவர்களுக்கும் சவால் விடுகின்ற அளவுக்கு என்னுடைய தமிழ்நாட்டு மாணவர்கள் வளர்ந்து இருக்க வேண்டும். அதுதான் என் கனவு. நிதி நெருக்கடி எவ்வளவு இருந்தாலும், கல்வித்துறையில் நிறைய புதுப்புதுத் திட்டங்களை தொடங்குகிறோம் என்றால், உங்களுக்காகத்தான்.
மற்ற எல்லாவற்றையும் நான் பார்த்துக்கொள்கிறேன். பதிலுக்கு, மாணவர்களான உங்களை நான் கேட்டுக்கொள்வது ஒன்றே ஒன்றுதான். படியுங்கள்... படித்துக் கொண்டே இருக்க வேண்டும். எங்கும் தேங்கி நிற்காமல் முன்னோக்கி ஓடிக்கொண்டே இருக்கவேண்டும். உங்கள் கண் முன்னால் "புல் ஸ்டாப்'' தெரியக்கூடாது. "கமா'' தான் தெரியவேண்டும். "கீப் ரன்னிங், கீப் வின்னிங், கீப் ஷைனிங்''. தமிழ்நாட்டை பெருமைப்படுத்துங்கள்.
கல்விதான் உங்களிடம் இருந்து யாராலும் திருடமுடியாத ஒரே சொத்து. ஆனால் அதிலும்கூட, மோசடிகள் செய்வதை நீட் போன்ற தேர்வு முறைகளில் பார்க்கிறோம். அதனால்தான் அதை கடுமையாக எதிர்த்து வருகிறோம். நீட் போன்ற தேர்வுகள் மோசடியானவை என்று முதன் முதலில் கூறியது தமிழ்நாடுதான். அதை இன்றைக்கு இந்தியாவே சொல்லத் தொடங்கியிருக்கிறது.
இந்த மோசடிக்கு நிச்சயம் ஒரு நாள் முடிவுகட்டுவோம். அது எங்கள் பொறுப்பு. மாணவச் செல்வங்களான நீங்கள் படிக்க சமூகமோ, பொருளாதாரமோ, அரசியல் சூழ்நிலையோ எதுவுமே தடையாக இருக்கக்கூடாது. அதுதான் என்னுடைய எண்ணம். அதுதான் இந்த திராவிட மாடல் ஆட்சியின் கொள்கை" என்று அவர் பேசினார்.
English Summary
mk stalin request to students for make tamilnadu proud in chennai nehru stadium