வருகின்ற தேர்தலுக்கும் "நீட் தேர்வை ரத்து செய்வோம்" என்ற வாக்குறுதியை கொடுத்தார் முக ஸ்டாலின்! - Seithipunal
Seithipunal


வரும் 2024 மக்களவைத் தேர்தலில் ‘ஐ.என்.டி.ஐ.ஏ’ கூட்டணி வெற்றி பெற்றால், நீட் தேர்வு நிச்சயம் தமிழ்நாட்டில் இருக்காது என்று, திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான  மு.க.ஸ்டாலின் வாக்குறுதி கொடுத்துள்ளார்.

இது குறித்த அவரின் அறிக்கையில், "நீட் தேர்வை ரத்து செய்யாத மத்திய அரசைக் கண்டித்தும், அதற்குத் துணைபோகும் ஆணவம் பிடித்த ஆளுநரைக் கண்டித்தும் திமுக இளைஞரணி, மாணவரணி, மருத்துவ அணி சார்பில் தமிழ்நாடு முழுவதும் நடத்தப்பட்ட உண்ணாநிலை அறப்போராட்டம் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.

காலை முதல் மாலை வரையிலான இப்போராட்டத்தில் மாணவர்கள், பெற்றோர், பொதுமக்கள் பங்கெடுத்திருப்பதை ஊடகங்களின் வாயிலாகப் பார்த்தபோது மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன்.

நீட் தேர்வை விலக்க வேண்டும் என்ற கோரிக்கையானது அரசியல் கோரிக்கையல்ல; அது கல்விக் கோரிக்கை. அதிலும் குறிப்பாக, சமூகச் சமத்துவக் கல்வியை விரும்பும் அனைவரது கோரிக்கை. நீட் தேர்வை விலக்க வேண்டும் என்ற கோரிக்கையானது திராவிட முன்னேற்றக் கழகம் என்ற அரசியல் கட்சியின் கோரிக்கையல்ல; அனைத்து மக்களின் கோரிக்கையாகவும் இன்று மாறி இருக்கிறது.

நீட் தேர்வு அறிமுகம் செய்யப்பட்ட காலத்தில் எதிர்த்தது நாம் சிலர்தான். ஆனால், இன்று இத்தேர்வின் கொடூரத் தன்மையை அனைவரும் அறிந்து விட்டார்கள். அதனால்தான் கட்சி எல்லைகளைக் கடந்து இத்தேர்வுக்கு எதிரான முழக்கம் நாடு முழுவதும் கிளம்பி வருகிறது. இவர்களது ஆதரவையும் சேர்த்து இப்போராட்டம் வெளிப்படுத்திவிட்டது.

மிக உறுதியாகக் கூறுகிறேன், 2024 நாடாளுமன்றத் தேர்தலில் நாங்கள் பங்கெடுக்கும் ‘இண்டியா’ கூட்டணி வெற்றி பெற்றால், நீட் தேர்வு நிச்சயம் தமிழ்நாட்டில் இருக்காது என்ற உறுதியை நான் அளிக்கிறேன். ஒன்றியத்தின் புதிய ஆட்சியில் நீட் தேர்வு நிச்சயம் இருக்காது என்பதை, தேர்தல் வாக்குறுதியாகவே அளிக்க வைப்போம். அந்த வலிமையும் உறுதியும் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு உண்டு. இப்படி ஒரு வாக்குறுதியை அதிமுகவும் அதன் கூட்டணிக் கட்சியான பாஜகவும் தர முடியுமா?

அரியலூர் அனிதா தொடங்கி - குரோம்பேட்டை ஜெகதீஸ்வரன் வரை ஏராளமான மாணவர்களின் உயிரைக் குடித்த நீட் தேர்வு ரத்து செய்யப்படும் வரை எங்களது போராட்டம் ஓயாது. நாடாளுமன்றத்திலும் - சட்டமன்றத்திலும் - மக்கள் மன்றத்திலும் போராடிய நாங்கள், அமைய இருக்கும் புதிய ஒன்றிய ஆட்சியின் மூலமாக வலியுறுத்தி நீட் தேர்வை ரத்து செய்ய வைப்போம்.

என்னைப் பொறுத்தவரையில், நான் நம்பிக்கை இழக்கவில்லை. நீட் என்பது ஏதோ மாற்ற முடியாத அரசியலமைப்புச் சட்டமல்ல. அரசியலமைப்புச் சட்டத்தையே காலில் போட்டு மிதித்தவர்கள் ஒன்றிய பாஜகவினர். 

எனவே, நீட் தேர்வும் ரத்தாகும். அதனை ரத்து செய்ய வலியுறுத்தும் உண்ணாநிலைப் அறப்போராட்டத்தை மிகச் சிறப்பாக நடத்திய தம்பி உதயநிதி, தம்பி எழிலரசன், மருத்துவர் எழிலன் ஆகியோருக்கும், பங்கெடுத்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் போராட்டம் நமக்கு மேலும் உறுதியை ஏற்படுத்தி இருக்கிறது. நீட் தடுப்புச் சுவர் உடைபடும் காலம் வெகுதூரத்தில் இல்லை” என்று, முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

MKStalin Announce 2024 Election manifesto for NEET Ban


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->