பங்காரு அடிகளார் உடலுக்கு "அரசு மரியாதையுடன்" இறுதி நிகழ்வு!
MKStalin announced Bangaru Adigalar final event with state honors
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பீடத்தின் நிறுவனர் பங்காரு அடிகளார் மறைவையொட்டி தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். அந்த இரங்கல் செய்தியில் "ஆதிபராசக்தி பீடத்தை நிறுவி அரை நூற்றாண்டிற்கும் மேலாக சிறப்பாக நடத்தி கல்வி, மருத்துவம் என பல்வேறு சமூக சேவைகளையும் மக்களுக்கு வழங்கி வந்தார்.
அம்மா என்று பக்தர்களால் அழைக்கப்பட்ட பங்காரு அடிகளார் அவர்கள் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆலயத்தில் பெண்களும் கருவறைக்குள் சென்று வழிபாடுகள் நடத்தும் புரட்சிகரமான நடைமுறைகளை வழங்கப்படுத்தினார்.
கோவில் கருவறைக்குள் அனைத்து சாதியினரும் சென்று அர்ச்சனை செய்ய வேண்டும் என்பதற்காக திமுக பல ஆண்டுகளாய் போராடி அதனை நடைமுறைப்படுத்தியும் வரும் நிலையில் அனைத்து பெண்களையும் கருவறைக்குள் சென்று அவர்களே பூசை செய்து வழிபடச் செய்த பங்காரு அடிகளார் அவர்களின் ஆன்மீக புரட்சி மிகவும் மதித்து போற்றத் தக்கது. அவர்களது ஆன்மீகம் மற்றும் சமூக சேவை பாராட்டி கடந்த 2019 ஆம் ஆண்டு ஒன்றிய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கிய பெருமைப்படுத்தியது.
கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நம்மை காக்கும் 48 திட்டத்தை தொடங்கி வைப்பதற்காக மேல்மருவத்தூர் சென்ற போது உடல் நலிவுற்றிருந்த பங்காரு அடிகளார் அவர்களை நேரில் சென்று பார்த்து நலம் விசாரித்து வந்தேன்.
உடல்நல குறைவால் சிகிச்சை பெற்று வந்த அடிகளார் அவர்கள் தற்போது மறைவு பெற்றிருப்பது அவர்கள் பக்தர்களுக்கு ஒரு பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர் பக்தர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். பங்காரு அடிகளார் அவர்களின் சேவைகளை போற்றும் வகையில் அரசு மரியாதை உடன் அவரது இறுதி நிகழ்வு நடைபெறும்" என அந்த இரங்கல் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
MKStalin announced Bangaru Adigalar final event with state honors