இயற்கை வளத்தை கொள்ளையடிப்போரை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும் - தமிழக அரசுக்கு மநீம வலியுறுத்தல்!
MNM Condemn for VAO murder
மணல் கடத்தலுக்கு இடையூறாக இருந்த கிராம நிர்வாக அலுவலர் படுகொலை செய்யப்பட்டுள்ள நிலையில், இனியாவது இயற்கை வளத்தை கொள்ளையடிப்போரை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும் என்று, தமிழக அரசுக்கு மநீம வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் துணைத் தலைவர், A.G.மெளரியா விடுத்துள்ள அறிக்கையில், "தூத்துக்குடி மாவட்டம் ஶ்ரீவைகுண்டம் வட்டம் முறப்பநாடு கோவில்பத்து கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
நேர்மையான அலுவலர் என்று பெயரெடுத்த அவர், தாமிரபரணி ஆற்றில் மணல் கொள்ளைக்கு இடையூறாக இருந்ததால் படுகொலை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
கொல்லப்பட்ட லூர்து பிரான்சிஸ் குடும்பத்தினருக்கு மக்கள் நீதி மய்யம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது. மணல் கொள்ளை தொடர்பாக அவர் ஏற்கெனவே காவல் துறையிடம் புகார் அளித்தும், உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இப்போக்கு மிகுந்த வருத்தமளிக்கிறது. வருங்காலத்தில் மணற்கொள்ளையில் ஈடுபடுவோரை காவல்துறையானது இரும்புக்கரம் கொண்டு அடக்குவதை உறுதிசெய்யக் கோருகிறோம்.
மறைந்த கிராம நிர்வாக அலுவலர் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிதி மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்கப்படுமென தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில் இயற்கை வளத்தைப் பாதுகாக்க முற்படும் சமூக ஆர்வலர்கள், அரசு அலுவலர்களுக்கு தமிழக அரசு உரிய பாதுகாப்பளிக்கவும் முதல்வர் ஆவன செய்ய வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.
English Summary
MNM Condemn for VAO murder