வெற்றிக் கூட்டணியா? வெத்துக் கூட்டணியா? வாக்கு எண்ணிக்கையில் தெரியும் - நயினார் நாகேந்திரன்.!!
nainar nagendiran press meet
பாஜக மாநில தலைவராக பொறுப்பேற்ற நயினார் நாகேந்திரன் நேற்று முதல் முறையாக பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது:- "இன்னும் ஓராண்டில் தேர்தல் வர உள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி உருவாகியுள்ளது. கடுமையாக உழைத்து இந்த கூட்டணியை ஆட்சிக்கு கொண்டு வருவோம். எங்கள் கூட்டணியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எப்படி தோல்வி கூட்டணி என்று சொல்ல முடியும்.
மக்கள் ஓட்டுதான் யார் வெற்றி பெறுகிறார்கள்? யார் தோல்வி பெறுகிறார்கள்? என்பதை தீர்மானிக்கும். முதலமைச்சர் சொல்வதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?. நாடாளுமன்ற தேர்தலில் எங்களுடன் அ.தி.மு.க. கூட்டணியில் இல்லை. இதனை மறைமுக கூட்டணி என்று சொல்வது தவறு.
தேர்தல் கூட்டணி வைத்ததும் ஒரு கருத்துக்கணிப்பு வரும். போக போக பல மாற்றங்கள், நிகழ்வுகள் நடக்கும். அதை பொறுத்து மக்களின் மனநிலையும் மாறும். தேர்தல் முடிந்து, வாக்கு எண்ணிக்கை முடிந்ததும்தான் அது வெற்றிக் கூட்டணியா? வெத்துக் கூட்டணியா? என்பது தெரியும். கூட்டணி சேரும்போது ஒரு கருத்தும், கூட்டணியில் இல்லாதபோது ஒரு கருத்தும் இருக்கும்.
இந்த காலக்கட்டத்தில் தி.மு.க.வை விரட்ட வேண்டும் என்ற கருத்தில் இணைந்துள்ளோம். பாஜகவின் எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கையை 4-ல் இருந்த 40 ஆக உயர்த்த வேண்டும் என்பது என்னுடைய எண்ணம். இறைவனின் நாட்டம் எதுவோ? ஏத்தபடி நடக்கும்" என்று அவர் தெரிவித்தார்.
English Summary
nainar nagendiran press meet