பாதயாத்திரை சென்ற பக்தர்கள் கூட்டத்திற்குள் புகுந்த கார் - ஒருவர் உயிரிழப்பு.!
near pavoorsththiram murugan devotee died for car accident
தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள முருக பக்தர்கள் பழனி, திருச்செந்தூர், சுவாமிமலை உள்ளிட்ட முருகன் கோவிலுக்கு மாலை அணிந்து விரதம் எடுத்து பாதயாத்திரை செல்லத் தொடங்கியுள்ளனர்.
இந்த நிலையில், நேற்று மாலை தென்காசி மாவட்டத்தில் செங்கோட்டை அருகே பெரியபிள்ளை வலசை கிராமத்தை சேர்ந்த இருபதுக்கும் மேற்பட்ட முருக பக்தர்கள் தங்களது ஊரில் இருந்து புறப்பட்டு திருச்செந்தூருக்கு பாதயாத்திரையாக சென்றுள்ளனர்.
இதையடுத்து, இவர்கள் நெல்லை-தென்காசி நான்கு வழிச்சாலையில் பாவூர்சத்திரம் அருகே சென்று கொண்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த கார் ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்து பாதயாத்திரை சென்றுக் கொண்டிருந்த பக்தர்கள் கூட்டத்திற்குள் புகுந்தது.
இந்த விபத்தில், பெரியபிள்ளை வலசை சாந்தி நகர் பகுதியை சேர்ந்த முருகன் என்பவரது மகன் குணசேகரன் மற்றும் அதே பகுதியை சேர்ந்த முத்துராஜ் என்பவரது மகன் சூர்யா உள்ளிட்ட இருவர் மீதும் கார் ஏறி இறங்கியது.
இதில், பலத்த காயமடைந்த இரண்டு பேரையும் அங்கிருந்தவர்கள் உடனடியாக மீட்டு தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு, குணசேகரன் மட்டும் பரிதாபமாக உயிரிழந்தார். சூர்யா தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த போலீசார் இரவு நேரத்தில் மது போதையில் காரை வேகமாக ஓட்டி வந்தவரை பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
அதன் பின்னர் அவரிடம் விசாரணை மேற்கொண்டதில், அவர் தூத்துக்குடி மாவட்டம் மாப்பிள்ளையூரணி விவேகானந்தர் தெருவை சேர்ந்த முருகன் மகன் ஜெயக்குமார் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
English Summary
near pavoorsththiram murugan devotee died for car accident