சத்திய சோதனை.. சர்ச்சையான ஆட்சியரின் ட்விட்.. விளக்கத்தையும் விட்டு வைக்காத நெட்டிசன்கள்..!!
Netizens criticized the Virudhunagar Collector explanation
திமுக ஆட்சி பொறுப்பேற்று 2 ஆண்டுகள் நிறைவடைந்து மூன்றாம் ஆண்டில் நேற்று அடி எடுத்து வைத்த நிலையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் உடன்பிறப்புகளும் அமைச்சர்களும் நிர்வாகிகளும் பல்வேறு வகையில் திமுக அரசின் 2 ஆண்டு நிறைவை கொண்டாடினர்.
அதேபோன்று தமிழக அரசின் செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறை சார்பில் பல்வேறு விளம்பரங்கள் செய்யப்பட்டன. அது தவிர திமுகவினர் தங்களின் சொந்த செலவில் அனைத்து செய்தித்தாள்களிலும் பக்கம் பக்கமாக திமுக அரசின் இரண்டு ஆண்டு சாதனைகள் குறித்து விளம்பரம் செய்திருந்தனர்.
மேலும் திமுகவின் தகவல் தொழில்நுட்ப அணியின் சார்பாக ஈடில்லா ஆட்சி 2 ஆண்டு சாட்சி என திமுக அரசின் இரண்டு ஆண்டு கால சாதனைகளை பெருமையுடன் பதிவிட்டிருந்தனர். இந்த நிலையில் விருதுநகர் மாவட்ட ஆட்சியரின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் "ஈடில்லா ஆட்சி இரண்டாண்டே சாட்சி - இந்திய துணை கண்டத்தின் வரலாறு" என பதிவிடப்பட்டது.
இதனை கண்ட நெட்டிசன்கள் மாவட்ட ஆட்சியரின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் இரண்டு ஆண்டு கால திமுக ஆட்சி குறித்து பெருமையுடன் பதிவிட்டதற்கு கடுமையான விமர்சனங்களை முன் வைத்தனர். மேலும் எதிர்க்கட்சியான அதிமுக தரப்பில் இருந்தும் பல்வேறு கண்டனங்களும் விமர்சனங்களும் எழுந்தன.
இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியரின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தன்நிலை விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில் "அரசின் இரண்டு ஆண்டு நிறைவை ஒட்டி, செயல்படுத்தப்பட்டுள்ள முக்கிய திட்டங்களை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வண்ணம் தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்பு துறையால் வடிவமைக்கப்பட்ட அட்டைகளை மாவட்ட நிர்வாகத்தின் சமூக வலை கணக்கில் பதிவேற்ற வேண்டும் என்ற செய்தி துறையின் அறிவுறுத்தலின் அடிப்படையில், மற்ற மாவட்டங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டதை போன்றே பொதுமக்கள் அனைவரும் அறிந்து கொள்ளும் வண்ணம் விருதுநகர் மாவட்ட நிர்வாக சமூக வலைதளப்பு கணக்கில் பதிவிடப்பட்டது என்ற விவரத்தை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்" என விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் விளக்கம் அளித்துள்ளார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியரின் விளக்கத்தையும் விட்டுவைக்காத இணையதளவாசிகள் கலாய்த்து வருகின்றனர். அதிலும் ஒருவர் " அரசின் இரண்டாண்டு நிறைவையொட்டி.. எந்த அரசின் இரண்டு ஆண்டு நிறைவு..? திமுக அரசின் நிறைவா..? தமிழக அரசின் நிறைவா..? தமிழக அரசு நிறைவு என பொய் சொன்னால் தமிழ்நாடு உருவாகிய 2 ஆண்டுகள் தான் ஆகுதான்னு கேட்பாங்க.. திமுக அரசின் நிறைவுன்னு உண்மைய சொன்னா, நீங்க மாவட்ட கலெக்டரா.! மாவட்ட செயலாளரான கேப்பாங்க.! சத்திய சோதனை" என மாவட்ட ஆட்சியரின் விளக்கத்தை கலாய்த்துள்ளார். தற்பொழுது விருதுநகர் மாவட்ட ஆட்சியராக இருக்கும் ஜெயசீலன் இதற்கு முன்பு செய்திகள் மற்றும் மக்கள் தொடர்பு துறையில் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Netizens criticized the Virudhunagar Collector explanation