சூடு பிடிக்கும் விஏஓ கொலை வழக்கு.. புதிய விசாரணை அதிகாரி நியமனம்.!!
New investigation officer appointed VAO murder case
தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அருகே உள்ள சூசைபாண்டியாபுரத்தை சேர்ந்தவர் லூர்து பிரான்சிஸ் முறப்பநாடு அருகே உள்ள கோவில்பத்து கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தார். இவர் மணல் கடத்தலை தடுத்ததாக கூறி கடந்த 26ம் தேதி 2 பேர் கொண்ட மர்ம நபர்கள் கிராம நிர்வாக அலுவலகத்தில் வைத்து வெட்டி கொலை செய்தனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் உள்ள அரசு அதிகாரிகள் இடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. கிராம நிர்வாக அலுவலர் பிரான்சிஸ் கொலை தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்த நிலையில் ராமசுப்பிரமணியன் , மாரிமுத்து ஆகிய 2 பேரை கைது செய்தனர்.
இந்த நிலையில் தாமிரபரணி பாதுகாப்பு இயக்க பொதுச்செயலாளர் அய்கோ மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அளித்த புகாரில் கிராம நிர்வாக அலுவலர் பிரான்சிஸ் கொல்லப்பட்டதற்கு முன்பாக மணல் கடத்தல் புகாருக்குள்ளான ராமசுப்பிரமணியம் முறப்பநாடு காவல் நிலையத்துக்கு சென்று அங்குள்ள காவலர்களுக்கு தன்னை கைது செய்யாமல் இருப்பதற்காக 35 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கொடுத்துள்ளார்.
ஆனால் கிராம நிர்வாக அலுவலர் பிரான்சிஸ் தொடர்ந்து அழுத்தம் கொடுத்ததால் வழக்கு பதிவு செய்திருப்பதாக காவல்துறையினர் கூறியதால் ஆத்திரத்தில் காவல் நிலையத்தில் இருந்து சற்று தூரத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலகத்திற்குச் சென்று லூர்து பிரான்சிசை வெட்டி படுகொலை செய்துள்ளனர்" என அந்த மனுவில் தெரிவித்து இருந்தார்
இந்த புகாரால் பெரும் சர்ச்சை எழுந்தது. கிராம நிர்வாக அலுவலர் கொலைக்கு காவல்துறையினரே உடந்தையாக இருந்திருக்கலாம் என பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இந்த நிலையில் கிராம நிர்வாக அலுவலர் பிரான்சிஸ் கொலை செய்யப்பட்ட வழக்கில் புதிய விசாரணை அதிகாரி நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
தென்மண்டல காவல் கண்காணிப்பாளர் சுரேஷை விசாரணை அதிகாரியாக நியமனம் செய்து தென்மண்டல ஐஜி அஸ்ராகார்க் உத்தரவு பிறப்பித்துள்ளார். காவல்துறையினர் தொடர்புடையதாக சந்தேகம் எழுந்ததன் காரணமாக விசாரணை அதிகாரி நியமனம மூலம் நடைபெறவுள்ள அடுத்தகட்ட நடவடிக்கைகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
English Summary
New investigation officer appointed VAO murder case