முகூர்த்தம் பார்த்தா கேள்வி கேட்க முடியும்? கச்சத்தீவு விவகாரத்தில் நிர்மலா சீதாராமன் கொந்தளிப்பு!
Nirmala Sitharaman Say About DMK And Katchatheevu issue
இன்று சென்னை பல்லாவரத்தில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தாவது, "ஒரு நாட்டின் பாதுகாப்பு, இறையாண்மை சம்பந்தப்பட்ட ஒரு விஷயத்தை முகூர்த்த நேரம் பார்த்து, சுபமுகூர்த்த நேரம் பார்த்து எல்லாம் பேச முடியாது. எப்போது வேண்டுமானாலும் பேசலாம்.
கச்சத்தீவு என்பது நமது தமிழக மீனவர்கள் வாழ்க்கையில் ஒரு அங்கம். நமது நாட்டின் பொருளாதார மண்டலத்திலும் முக்கிய பங்காக உள்ளது. அப்படி இருக்கையில் கச்சத்தீவை பற்றி பேசக்கூடாது அதற்கென்று ஒரு நேரம் இருக்கிறது என்றால் எப்படி நியாயம்.
கச்சத்தீவு நம் உரிமை. தேர்தலுக்காக தான் பேச வேண்டும் என்பதில்லை. எப்போது வேண்டுமானாலும் பேசலாம். கச்சத்தீவு விவகாரத்தில் கடந்த 50 ஆண்டுகளாக திமுகவும், காங்கிரஸும் உண்மைக்கு புறம்பான ஒரு பிரச்சாரத்தை மேற்கொண்டு வந்திருப்பது தற்போது அம்பலமாகியுள்ளது.
அன்றும், இன்றும் திமுக - காங்கிரஸ் கூட்டணியில் உள்ளது. காங்கிரஸ் ஒரு தேசிய கட்சியாக இருந்து கொண்டு கச்சத்தீவு குறித்து விளக்கம் கொடுக்காமல், அதைப் பற்றி பேசக்கூடாது என்று சொல்கிறது.
நேரு தனது கடிதத்தில் கச்சத்தீவை ஒரு தொல்லை என்றும், எப்போது அந்த தொல்லை போகும் என்றும் குறிப்பிட்டிருந்தார். அந்த கடிதத்தை சமர்ப்பிக்கவும் நான் தயாராகத்தான் இருக்கிறேன். அதே போல் இந்திரா காந்தி கச்சத்தீவை ஒரு சிறிய பாறை தான், அதனால் எந்த பயனும் இல்லை என்றார்.
கச்சத்தீவு விவகாரத்தில் 1974 ஆம் ஆண்டு வெளியுறவுத்துறை செயலாளர் விரிவாக எடுத்துக் கூறியும், அப்போதைய முதல்வர் கருணாநிதி எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. ஆனால் பொய் பிரச்சாரம் மட்டுமே செய்து கொண்டிருந்தார்.
தேர்தலுக்காக மட்டுமல்ல, தேர்தல் இல்லை என்றாலும் சொல்ல வேண்டிய இந்த விஷயத்தை தமிழக மக்களுக்கு சொல்லியிருப்போம். இந்த உண்மையை தமிழக மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
கச்சத்தீவு விவகாரம் மட்டுமல்ல, தமிழக மக்களுக்கு விரோதமான செயல்களை காங்கிரஸ் கட்சி செய்யும் போது கூட திமுக அமைதி காத்து ஒரு போராட்டம் கூட நடத்தவில்லை" என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
English Summary
Nirmala Sitharaman Say About DMK And Katchatheevu issue