அலறும் கடலூர் மாவட்டம்.!! இவர்களையும் உடனே அப்புறப்படுத்துங்க..!! காவல்துறைக்கு பறந்த கடிதத்தால் பரபரப்பு.!!
NLC letter to police to dispose contract workers from protest place
என்எல்சிக்கு எதிராக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஒப்பந்த தொழிலாளர்களை வேறு இடத்திற்கு மாற்ற உதவ வேண்டும் என என்எல்சி நிர்வாகம் மாவட்ட காவல்துறைக்கு கடிதம்.!!
கடலூர் மாவட்டம் நெய்வேலியில் செயல்பட்டு வரும் என்எல்சி இந்தியா நிறுவனம் தனது இரண்டாவது நிலக்கரி சுரங்க விரிவாக்கத்திற்கு வளையமாதேவி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கிராமங்களில் நிலம் கையகப்படுத்தும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், விவசாயிகளும், பொதுமக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது ஒரு புறம் இருக்க என்எல்சி நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் ஜீவா ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தினர் கடந்த ஜூலை 26 ஆம் தேதி முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஜீவா ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தின் சார்பில் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நெய்வேலியில் உள்ள என்எல்சி தலைமை அலுவலகம் முன்பு தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பகலில் அறவழி போராட்டமும், இரவில் அதே இடத்தில் சமைத்து உண்ணும் போராட்டமும் என 24 மணி நேரமும் என்எல்சி நிறுவனத்தின் தலைமை அலுவலகம் முன்பு அமர்ந்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் என்எல்சி நிர்வாகம் கடலூர் மாவட்ட காவல்துறைக்கு கடிதம் எழுதியுள்ளது.
அந்த கடிதத்தில் "என்எல்சி நிறுவனத்தின் தலைமை அலுவலகத்திற்கு எதிரே போராடும் ஒப்பந்த தொழிலாளர்களை வேறு இடத்திற்கு மாற்ற உதவிட வேண்டும். ஒப்பந்த தொழிலாளர்களின் போராட்டத்தால் அன்றாட செயல்பாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் என்எல்சி நிறுவனத்திற்கும் ஊழியர்களுக்கும் அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்புள்ளது.
ஏற்கனவே என்எல்சி தலைமை அலுவலகத்திற்கு மத்திய தொழிற்படை 24 மணி நேரமும் பாதுகாப்பில் இருந்தாலும், ஒப்பந்த தொழிலாளர்களின் போராட்டத்தால் பதட்டமான சூழல் நிலவுகிறது. பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் ஒப்பந்த தொழிலாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
என்எல்சி நிறுவனத்தின் தலைமை அலுவலகம் தடை செய்யப்பட்ட பகுதி என்பதால் ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டம் நடத்த அனுமதிக்க கூடாது. மேலும் என்எல்சி நிறுவனமே போராட்டம் நடத்த நான்கு இடங்களை ஒதுக்கி தருகிறோம். குறிப்பாக நெய்வேலியில் உள்ள காமராஜர் மைதானம், டிசிஎஸ் மைதானம், வளைவு பாலம் பகுதி, வட்டம் மூன்றுக்கு அருகே உள்ள பள்ளி மைதானம் ஆகிய இடங்களில் போராட்டம் நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளதால் இவர்களை அந்த இடத்திற்கு மாற்ற வேண்டும்" என அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே என்எல்சி நிறுவனத்திற்கு எதிராக வளையமாதேவி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி மக்கள், விவசாயிகள், அரசியல் கட்சி தலைவர்கள் என பல்வேறு தரப்பினர் போராட்டம் நடத்தி வரும் நிலையில் ஒப்பந்த தொழிலாளர்களும் என்எஸ்சி நிறுவனத்திற்கு எதிராக போராட்டம் நடத்தி வருவதால் கடலூர் மாவட்டம் முழுவதும் பதட்டமான சூழல் நிலவி வருகிறது. இதன் காரணமாக அவர்களை அப்புறப்படுத்த வேண்டும் என என்எல்சி நிர்வாகம் காவல்துறைக்கு கடிதம் எழுதி இருப்பது கடலூர் மாவட்டத்தில் பதட்டத்தை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
NLC letter to police to dispose contract workers from protest place