உலகத்தரமான கல்வியை அனைவருக்கும் வழங்க வேண்டும் - வெளியானது நா.த.கவின் தேர்தல் அறிக்கை.!  - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் வரும் 19 ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். அந்த வகையில், நாம் தமிழர் கட்சி தமிழ்நாடு, புதுச்சேரியில் 40 தொகுதிகளில் 'மைக்' சின்னத்தில் போட்டியிட உள்ளது. 

இந்த நிலையில் கட்சியின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நேற்று வெளியிட்டார்.
அதில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

* பா.ஜனதா, காங்கிரஸ் இரண்டுமே ஒற்றை நாணயத்தின் இரட்டை முகங்கள் போன்றவை. இந்த இரு கட்சிகளையும் புறந்தள்ளி, மாநிலக் கட்சிகள் ஒருமித்து மத்தியிலே ஒரு கூட்டாட்சியை அமைப்பது ஒன்றுதான் தேசிய இனங்கள் இடையேயான ஒருமைப்பாட்டுக்கும், மாநிலங்களில் நலன்களுக்கும் ஏற்றதாகும். அதனை நோக்கியே நாம் தமிழர் கட்சி பயணிக்கிறது.

* அவரவர் நிலத்தை அவரவர் ஆள்வோம். இந்தியாவை கூடிப் பேசி ஆள்வோம் என்ற பெரும் முழக்கத்துக்கேற்ப தேசிய இனங்களின் தாயகங்களான மாநிலங்களை மண் மீதும், மக்கள் மீதும் பற்றுறுதி கொண்ட அந்தந்த மாநிலக் கட்சிகளே ஆள வேண்டும்.

* பிரதமர் பதவியானது இந்திய அரசின் பகுதிகளாக இருக்கும் அனைத்து தேசிய இனங்களும் ஆளுமை செலுத்தும் வண்ணம், சுழற்சி முறையில் அமைந்திடும் வகையில் அரசமைப்பு சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வதற்கான முயற்சிகளை அனைத்து தேசிய இனக் கட்சிகளுடன் ஒன்றிணைந்து நாம் தமிழர் கட்சி முன்னெடுக்கும்.

* மக்களால் தேர்வு செய்யப்படக்கூடிய ஒருவர் மீண்டும் மக்களை சந்தித்துதான் வெற்றிபெற வேண்டும் என்ற தேவை இருக்கின்ற வரையில்தான், அவர் மக்களின் நலனுக்காக செயலாற்றுவார். எனவே ஜனாதிபதி மக்களால் நேரடியாக தேர்தலின் வழியே தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.

* மாநில அரசின் ஆளுகைக்கு இடையூறாக விளங்கும் கவர்னர் பதவியானது இந்திய அரசின் எந்தவொரு மாநிலத்துக்கும் தேவையில்லை எனும் நிலையே மாநில தன்னாட்சியை பேணுவதற்கு வழிவகுக்கும். எனவே கவர்னர் பதவியை முழுமையாக நீக்கம் செய்ய ஏதுவாக சட்டத்தை திருத்தம் மேற்கொள்வதற்கான செயல்பாடுகளை நாம் தமிழர் கட்சி முன்னெடுக்கும்.

* சமமற்ற தேர்தல் போட்டி முறையை மாற்றி அமைக்க ஒவ்வொரு தேர்தலிலும் அனைத்து கட்சிகளுக்கும் புதிய சின்னங்களை ஒதுக்கி போட்டியிட செய்யும் முறையை நாம் தமிழர் கட்சி முன்மொழிகின்றது. அப்படி இல்லையென்றால், அமெரிக்காவை போல அனைத்து கட்சிகளுக்கும், வேட்பாளர்களுக்கும் அடையாள எண்களை மட்டும் ஒதுக்கி சின்னமற்ற முறையில் தேர்தல் நடத்தப்பட வேண்டும். அதேபோல், வாக்கு எந்திரத்துக்கு தடை விதித்து, மீண்டும் வாக்குச்சீட்டு முறைக்கே இந்திய அரசு திரும்பும் வகையில் தேர்தல் சீர்திருத்தங்களை நாம் தமிழர் கட்சி வலியுறுத்துகிறது.

* கச்சத்தீவு ஒப்பந்தத்தை நீக்கம் செய்து தமிழ்நாட்டின் நிலவுரிமையையும், மீனவர்களின் மீன்பிடி உரிமையையும் நிலைநாட்ட அனைத்து தேசிய இனக் கட்சிகளுடன் இணைந்து நாம் தமிழர் கட்சி முயற்சி மேற்கொள்ளும்.

* குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய மக்கள் தொகைப் பதிவேடு, தேசிய குடியுரிமை பதிவேடு, பொது சிவில் சட்டம், தேர்தல் பத்திரம் ஆகியவற்றை கடுமையாக எதிர்க்கிறது.

* படிக்காதவர்களே இல்லை என்ற நிலையை உருவாக்குவதே நாம் தமிழர் கட்சியின் நிலைப்பாடு. தென்கொரியா, ஜப்பான், சிங்கப்பூர், ஹாங்காங், பின்லாந்து நாடுகளில் உள்ள கல்வி முறையை பின்பற்றி உலகத்தரமான கல்வியை அனைவருக்கும் சமமாக வழங்க வேண்டும் என்பதும் கட்சியின் கொள்கை.

* விடுதலை புலிகள் இயக்கத்தின் மீதான தடையை மத்திய அரசு நீட்டிப்பது முறையல்ல. அதனை நீக்க வேண்டும் என்று பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ntk leader seeman election report published


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->