எந்தக் கொம்பனும்...! குறையைத் தவிர எதையும் சொல்ல முடியாத ஆட்சியா? சீமான் கொந்தளிப்பு!
NTK Seeman AMMK TTV Condemn to TNGovt
எந்தக் கொம்பனும் குறை சொல்ல முடியாத ஆட்சியா? குறையைத் தவிர எதையும் சொல்ல முடியாத ஆட்சியா? என்று, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், "ஆசிரியர்கள் பதவி உயர்வைப் பறிக்கும் அரசாணை 243ஐ கைவிட வேண்டும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும், இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்களைச் சரிசெய்ய வேண்டும், உள்ளிட்ட நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி அமைதி வழியில் அறப்போராட்டத்தை முன்னெடுக்கும் தொடக்கக்கல்வி ஆசிரியர் பெருமக்களைக் கொடுங்குற்றவாளிகள் போல கைது செய்யும் திமுக அரசின் கொடுங்கோன்மைச் செயல் வன்மையான கண்டனத்துக்குரியது.
திமுக அரசு தனது தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகளைத்தானே ஆசிரியர் பெருமக்கள் நிறைவேற்றக் கோருகிறார்கள்? ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகளாகியும் அதைக்கூட திமுக அரசால் நிறைவேற்ற முடியாதா?
உரிமை கேட்டு அமைதிவழியில் போராடுவது அரசியலமைப்பு வழங்கிய அடிப்படை உரிமையாகும்; அதைக்கூட அனுமதிக்க மறுப்பதற்குப் பெயர்தான் திராவிட மாடலா?
கருத்துரிமையைக் காலில் போட்டு மிதித்து, போராடும் ஆசிரியர்களை சமூக விரோதிபோலக் கைது செய்வதுதான் சமூகநீதி அரசா? இதுதான் எந்தக் கொம்பனும் குறை சொல்ல முடியாத ஆட்சியா?
திமுக அரசு, கைது செய்யப்பட்ட ஆசிரியர் பெருமக்களை எவ்வித வழக்கும் பதியாமல் உடனடியாக விடுவித்து, அவர்களது கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்றித் தரவேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார்.
இதேபோல் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விடுத்துள்ள கண்டன செய்தியில், "ஜனநாயக முறையில் போராட முயன்ற தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது – தொடக்கக் கல்வி ஆசிரியர்களின் பதவி உயர்வு மற்றும் முன்னுரிமையை பறிக்கும் பள்ளிக்கல்வித்துறை அரசாணை எண் 243-ஐ தமிழக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.
English Summary
NTK Seeman AMMK TTV Condemn to TNGovt