தமிழக சட்டசபையா? சாராய சபையா? 11 வயது சிறுவன் பலி குறித்து ஏன் பேசல - கொந்தளிக்கும் சீமான்!
NTK Seeman Condemn to TN Assembly and DMK Govt
கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு ரூபாய் பத்து லட்சம். ஆனால் சாகித்யா அகாடமி விருது பெற்றவர்களுக்கு ரூ.25 ஆயிரம் மட்டும் தான், அப்படி என்றால் அகாடமி விருதை விட கள்ளச்சாராயம் குடிப்பது உயர்ந்ததா? என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பி உள்ளார்.
விக்கிரவாண்டி இடைதேர்தலில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் அபிநயாவை ஆதரித்து, திருவாமத்தூர் கிராமத்தில் சீமான் பிரச்சாரம் மேற்கொண்டார்.
இந்தப் பிரச்சாரத்தில் பேசிய சீமான், "சென்னை சைதாப்பேட்டையில் 11 வயது சிறுவன் தண்ணீர் குடித்ததால் உயிரிழந்துள்ளான். குடிநீரில் கழிவு நீர் கலந்துவிட்டது. இது குறித்து சட்டசபையில் யாரும் பேசவில்லை. சட்டசபையில் கள்ளச்சாராயத்தை தவிர வேறு எது பற்றியும் பேசப்படவில்லை. அது சட்டசபையா அல்லது சாராய சபையா என்று தெரியவில்லை.
அனைவரும் மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என்று ஒருமித்தமாக சொல்கின்றனர். அந்த மாற்றத்தை யார் கொண்டுவர வேண்டும் என்று சிந்தியுங்கள். மாற்றம் மாற்றம் என சொல்லிக் கொண்டிருந்தால் மட்டும் போதாது, நாம் தான் அதனை மாற்ற வேண்டும்.
7அடி தாண்டுவதற்கு 70 அடி பின்னோக்கி செல்ல வேண்டிய நிலைமை உள்ளது. எனவே, நாங்கள் தற்காலிக தோல்விக்காக நிரந்தர வெற்றியை இழக்க மாட்டோம்.
கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால், சாகித்யா அகாடமி விருது பெற்றவர்களுக்கு ரூ.25 ஆயிரம் மட்டும் தான்.
அப்படியென்றால் சாகித்ய அகாடமி விருதை விட கள்ளச்சாராயம் குடிப்பவர்கள் உயர்ந்தவர்களா?.
உழைத்து களைத்த மக்களுக்கு ஒரு பானம் தேவைப்படுகிறது, அதனால் தான் மதுபானம் கொடுக்கிறோம் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். இவர்களிடம் தமிழக மக்கள் நன்றாக சிக்கிக் கொண்டார்கள். இதிலிருந்து மீள்வதற்கு ஒரே ஒரு வாய்ப்பு தான் உள்ளது. மைக் சின்னத்திற்கு வாக்களியுங்கள்" என்று சீமான் பேசினார்.
English Summary
NTK Seeman Condemn to TN Assembly and DMK Govt