பரமக்குடி: பள்ளி மாணவிகளிடம் பாலியல் அத்துமீறல் - புகார் அளித்தும் கண்டுகொள்ளாத போலீஸ்! சீமான் கடும் கண்டனம்! - Seithipunal
Seithipunal


பரமக்குடியிலுள்ள ஆயிர வைசிய மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளிடம் பாலியல் அத்துமீறலைச் செய்த ஆசிரியர் மீது சட்டநடவடிக்கை எடுத்து, உடனடியாகக் கைதுசெய்ய வேண்டும் என்று, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், "பரமக்குடியிலுள்ள ஆயிர வைசிய மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளிடம் ஆசிரியரே பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட செய்தியானது பெரும் அதிர்ச்சியைத் தருகிறது. 

பிஞ்சுக்குழந்தைகளுக்கு வாழ்க்கையைக் கற்றுத் தரும் அறிவுக்கருவறையாக விளங்கும் கல்விக்கூடங்களிலேயே பாலியல் கொடுமைகள் நடப்பதாக வெளிவரும் அண்மைக்கால செய்திகளானது பெரும் வேதனையைத் தருகின்றன. 

அறவுணர்வும், ஒழுக்கம் சார்ந்த சிந்தனையும் அற்ற குற்றச்சமூகமாக இச்சமூகம் மாறிப்போனதன் விளைவை நாள்தோறும் காண்கிறோம். 

இதனால், பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே நிலவும் மிதமிஞ்சியப் போதைப்புழக்கமும், மாணவிகளுக்கு விளைவிக்கப்படும் பாலியல் கொடுமைகளும் எதிர்கால தலைமுறை குறித்தான பேரச்சத்தைத் தருகின்றன. 

பள்ளிக்கல்வித்துறையில் தொடர்ச்சியாக நிகழும் நிர்வாகச்சீர்கேடுகள் அத்துறையின் இழிநிலையை எடுத்துக்காட்டுகின்றன.

பரமக்குடி பள்ளிக்கூடத்தில் விலங்கியல் ஆசிரியராகப் பணிபுரியும் வெங்கடேசன் என்பவரே அங்குள்ள மாணவிகளிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியிருப்பது பள்ளியினுடைய ஒழுங்கு நடவடிக்கைக்குழுவின் விசாரணையில் உறுதிசெய்யப்பட்டு, புகாரளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காத காவல்துறையின் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது. 

இதுபோன்று கல்விக்கூடங்களில் நிகழும் பாலியல்ரீதியான வன்முறைகளைத் தடுக்க அரசு விழிப்போடும், முன்னெச்சரிக்கை உணர்வோடும் இருத்தல் பேரவசியமாகும் இத்தகையக் கொடுங்குற்றங்களில் ஈடுபட்டவர்கள் எவராயினும் எவ்வித பாகுபாடுமில்லாது உரிய சட்டநடவடிக்கையை மேற்கொள்ள முன்வர வேண்டும்.

ஆகவே, பரமக்குடியிலுள்ள ஆயிர வைசிய மேல்நிலைப்பள்ளியில் உரிய நீதிவிசாரணை நடத்தி, தொடர்புடைய ஆசிரியர் மீது கடும் சட்டநடவடிக்கை எடுத்து, உடனடியாகக் கைதுசெய்ய முன்வர வேண்டும்" என்று சீமான் வலியுறுத்தியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

NTK Seeman Condemn to TNgovt MK Stalin Paramakudi School girl Abuse case


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->