தஞ்சை : 500 கோடி ரூபாய் மதிப்புள்ள பச்சை மரகத லிங்கம்.! வங்கி லாக்கரில் இருந்து மீட்ட சிலை தடுப்பு பிரிவு காவல்துறை.!
PACHAI MARAKATHA LINGAM
தஞ்சை, அருளானந்தம் நகர் பகுதியில் சாமியப்பன் என்பவரின் வங்கி லாக்கரில் தொன்மையான பச்சை மரகத லிங்கம் மீட்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வெளியான அதிகாரபூர்வ செய்தியின்படி, நேற்று தஞ்சாவூர், அருளானந்த நகர், சுவாமிநாதன் என்பவர் வீட்டில் தொன்மையான கோவில் சிலைகள் பதுக்கி வைத்திருப்பதாக, சிலை தடுப்பு பிரிவு காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து சிலை திருட்டு தடுப்பு பிரிவு காவல் துறை கூடுதல் இயக்குனர் உத்தரவின்பேரில், போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது, சாமியப்பன் மகன் அருணபாஸ்கர் என்பவரிடம் ஏதேனும் தொன்மையான கோவில் சிலைகள் தங்கள் வசம் உள்ளதா என்று போலீசார் விசாரணை செய்தபோது, அவரின் தந்தை சாமியப்பன் வசம் தொன்மையான பச்சை மரகத லிங்கம் ஒன்று இருப்பதாகவும், அதை தற்சமயம் வங்கி லாக்கரில் வைத்து உள்ளதாகவும் தெரிவித்தார்.
இதனை அடுத்து அந்த மரகத லிங்கம் சிலை எப்படி சாமிநாதனுக்கு கிடைத்தது என்று அவரிடம் போலீசார் விசாரணை நடத்திய போது, இது குறித்து ஆவணங்கள் எதுவும் தங்களிடம் இல்லை என்று தெரிவித்தார். இதனை அடுத்து தொன்மையான பச்சை மரகத லிங்கத்தை தங்களிடம் விசாரணையின் பொருட்டு ஆஜர்படுத்துமாறு கேட்டபோது, சாமிநாதன் வங்கி லாக்கரில் இந்த மரகதலிங்கம் இருப்பதாக தெரிவித்தார்.
இதனையடுத்து வங்கி லாக்கரில் இருந்த மரகதலிங்கத்தை போலீசார் தற்போது மீட்டுக் கொண்டு வந்து உள்ளனர்.
இந்த மரகத லிங்கத்தின் விலை சுமார் 500 கோடி ரூபாய் இருக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது. 2016ஆம் ஆண்டு நாகப்பட்டினம் மாவட்டம் திருகுவளையில் உள்ள கோவிலில் காணாமல்போன இந்த மரகதலிங்கம் சிலை தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்ற தகவலும் தற்போது வெளியாகியுள்ளது.
மேலும் எப்படி இந்த மரகத லிங்கம் சாமிநாதனுக்கு கிடைத்தது என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல், மரகத லிங்கம், கோயிலுக்கு சொந்தமானதா என்பது குறித்தும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.