தொடரும் கனமழை - வெள்ளக் காடான பந்தலூர் - 48 பேர் மீட்பு..!!
Pandalur Flooded Due to Continuous Heavy Rain
நீலகிரி மாவட்டத்தின் பந்தலூர் மற்றும் கூடலூர் ஆகிய பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் அப்பகுதி முழுக்க வெள்ளக் காடாக மாறியுள்ளது. பந்தலூர் மற்றும் கூடலூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தால் சூழப் பட்டுள்ளன.
பாடந்துறை பகுதியில் சாலைகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் போக்குவரத்து முற்றிலுமாக துண்டிக்கப் பட்டுள்ளது. மேலும் அந்த பகுதியில் உள்ள ஆவின் பால் கொள்முதல் நிலையம் முழுவதுமாக வெள்ளத்தால் சூழப் பட்டுள்ளது. இதனால் ஆவின் பணியாளர்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகி உள்ளனர்.
மேலும் பந்தலூர் பஜார் பகுதியில் உள்ள சாலைகள் அனைத்தும் வெள்ளத்தால் சூழப் பட்டுள்ளன. மேலும் தேவாலா - கரியசோலை சாலையில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து தடை செய்யப் பட்டுள்ளது. மேலும் பந்தலூரில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதையடுத்து அங்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.
இதுகுறித்து பந்தலூர் வட்டாட்சியர் தெரிவிக்கையில், "பந்தலூரில் தொடர் மழை காரணமாக 15க்கும் மேற்பட்ட இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. மேலும் இதுவரை 50 பேர் வரை மீட்கப் பட்டு முகாம்களில் தங்க வைக்கப் பட்டுள்ளனர். மேலும் பல முகாம்கள் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப் பட்டு வருகிறது" என்று தெரிவித்துள்ளார்.
இதையடுத்து கூடலூர் பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் 9 வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. இதையடுத்து அங்கு வீடுகளில் சிக்கியிருந்த 48 பேரை தீயணைப்புத் துறையினர் மீட்டு அருகில் உள்ள ஜிடிஆர் நடுநிலைப் பள்ளியில் தங்க வைத்துள்ளனர்.
English Summary
Pandalur Flooded Due to Continuous Heavy Rain