நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க போகும் பரந்தூர் கிராம மக்கள் - இதுதான் காரணமா?
paranthur village peoples avoide parliment election for paranthur airport issue
காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் சுற்றுவட்டாரத்தில் 20 கிராமங்களை உள்ளடக்கி 5,746 ஏக்கர் பரப்பளவில் விமான நிலையம் அமைக்கப்பட உள்ளது. தற்போது இதற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும், மத்திய அரசோ, மாநில அரசோ விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை கைவிடுவதற்கான எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்த நிலையில் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 300-க்கும் மேற்பட்ட மக்கள் கிராம பகுதியில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு சென்று தங்களின் வயலில் இறங்கி அறுவடைக்கு தயாராகி வரும் நெற்பயிர்களை கட்டி அணைத்து கதறி அழுதபடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் மத்திய, மாநில அரசுகள் விமான நிலைய திட்டத்தை கைவிட வேண்டும் என்று கோரிக்கை வைத்து கோஷங்களையும் எழுப்பினார்கள். கிராம மக்களின் போராட்டத்தையொட்டி ஏகனாபுரம், நெல்வாய், பரந்தூர் உள்ளிட்ட பல பகுதிகளில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
இந்தப் போராட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த விமான நிலைய எதிர்ப்பு போராட்ட குழு செயலாளர் சுப்பிரமணியன், "விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவிக்கும் கிராம மக்களின் போராட்டத்தை மத்திய, மாநில, அரசுகள் கண்டுகொள்ளவில்லை. ஆகவே இனி கிராமத்தில் மாலை நேர போராட்டங்களை நடத்தபோவதில்லை.
சட்டப்போராட்டத்தை கையில் எடுத்து, நீதிமன்றத்தை நாட உள்ளோம். நீதிமன்றம் தங்களை கைவிடாது என்ற நம்பிக்கை உள்ளது. விமான நிலையம் அமைக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் கிராம மக்கள் அனைவரும் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க போகிறோம்" என்றுத் தெரிவித்துள்ளார்.
English Summary
paranthur village peoples avoide parliment election for paranthur airport issue