பெட்ரோல், டீசல் விலை உயர்வு எதிரொலி ..காங்கிரசை தொடர்ந்து அதிமுக கடும் எதிர்ப்பு!
Petrol, diesel prices hiked AIADMK slams Congress
சாமானிய மக்களை பாதிக்கின்ற விதத்தில் பெட்ரோல், டீசல் வரி உயர்வை அரசு உயர்த்தியுள்ளது தேவையற்ற ஒன்றாகும் என்றும் இது தொடர்பாக துணைநிலை ஆளுநர் அவர்களை சந்தித்து உரிய மனு அளிக்கப்படும் என அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அதிமுக மாநில செயலாளர் அன்பழகன்:புதுச்சேரி மாநிலத்தில் வருவாய் பற்றாக்குறையை சீர்படுத்த பல்வேறு வழிகள் இருந்தும், அவற்றையெல்லாம் சீர்தூக்கி பார்க்காமல் சாமாணிய மக்களை பாதிக்கின்ற விதத்தில் பெட்ரோல், டீசல் வரி உயர்வை அரசு உயர்த்தியுள்ளது தேவையற்ற ஒன்றாகும். பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பல்வேறு அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்த்தப்படுவதால் அது நம் மாநில பொருளாதாரத்தை பாதிக்கும்.
புதுச்சேரி மாநிலத்தை பொருத்தமட்டில் கல்வி என்பது முழுக்க முழுக்க 100 சதவீதம் வியாபாரமாக நடத்தப்படும் சூழ்நிலையில் தனியார் பள்ளிகள், தனியார் கல்லூரிகள், தனியார் மருத்துவ கல்லூரிகள் உள்ளிட்டவைகளுக்கு சொத்துவரியை விதிக்க வேண்டும். இது சம்பந்தமாக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பே ஏன் தனியார் கல்வி நிறுவனங்களின் சொத்துக்களுக்கு சொத்துவரி வசூல் செய்யவில்லை என ஆடிட்டிங்கில் அப்ஜக்ஷன் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனாலும் இதன் மீது எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காமல் தனியார் கல்வி நிறுவனங்களுக்கு சாதகமான ஒரு நிலைபாட்டை கடந்த கால காங்கிரஸ் திமுக அரசும், தற்போதைய ஆளும் பாஜக என்.ஆர்.காங்கிரஸ் அரசும் எடுத்து வருகிறது. எந்த தனியார் கல்வி நிறுவனங்களும் புதுச்சேரி மாநிலத்தில் தர்மத்திற்காகவோ, ஏழை எளிய மக்களுக்காகவோ நடத்தப்படவில்லை என்பதை அரசு உணர வேண்டும்.
மதுபான கொள்கையில் சிறிய மாற்றம் கொண்டு வந்து மதுபான கொள்முதல் மற்றும் தனியார் மதுபான கடைகளுக்கு மதுபானம் வினியோகம் ஆகியவற்றை அரசு ஏற்றுக்கொண்டாலே ஆண்டுக்கு ரூ.750 கோடிக்கு மேல் கூடுதலாக அரசுக்கு வருவாய் வரும். அதே போன்று மதுபானம் தயாரிக்க மூலப்பொருட்களான ENA புதுச்சேரி மாநிலத்தில் உற்பத்தி செய்யப்படுவதில்லை. மாதத்திற்கு சுமார் 30 லட்சம் லிட்டர் ENA வெளிமாநிலங்களில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றது. அவ்வாறு இறக்குமதி செய்யப்படும் ENA-விற்கு ஒரு லிட்டருக்கு குறைந்தபட்சம் ரூ.10 வரி விதித்தாலே ஓர் ஆண்டுக்கு சுமார் ரூ.40 கோடி அளவில் அரசுக்கு வருவாய் கிடைக்கும். ஆனால் அதையும் அரசு கண்டுகொள்வதில்லை.
புதுச்சேரி மாநிலத்தை பொறுத்தமட்டில் கடந்த 10 வருடங்களாக நில மதிப்பு உயர்த்தப்படவில்லை. தற்போதைய மார்க்கெட் மதிப்பினை கருத்தில் கொண்டு ஓரளவிற்கு நில மதிப்பை உயர்த்தினாலேயே அரசுக்கு பத்திர பதிவின் மூலம் கூடுதலாக வருவாய் பெருகும். அதே நேரத்தில் தனியார் சொத்து மதிப்பும் உயரும். ஒரு இடத்தை வாங்கும் போதோ, விற்கும் போதோ அதன் மதிப்பை குறைத்து பத்திரப்பதிவு செய்வது தடுத்து நிறுத்தப்படும்.
பேருந்து கட்டணம் உயர்வு தற்போது உயர்த்தப்பட்டுள்ளது. தனியார் கல்லூரிகள் மற்றும் தனியார் பள்ளிகள் மூலம் இயக்கப்படும் பேருந்துகளுக்கு சாலை வரி காலாண்டு வரி உள்ளிட்டவை நம்முடைய அண்டை மாநிலத்தை விட 10-ல் ஒரு பங்கு அளவிற்கு குறைவாக உள்ளது. அதே போன்று தனியார் பேருந்துகளில் காலாண்டு இருக்கை வரிகள் அண்டை மாநிலங்களில் உள்ளது போன்று உயர்த்த உரிய நடவடிக்கை எடுக்கலாம்.
இதுபோன்ற பல்வேறு விதங்களில் நம் மாநிலத்தில் வருவாயை பெருக்க பல வழிகள் இருந்தும் அவற்றையெல்லாம் அரசு சீர் தூக்கி பார்க்காததால் இதுபோன்ற தொழில்களில் உள்ளவர்கள் தொடர்ந்து பயன்பெற்று வருகின்றனர். இதற்கெல்லாம் ஆட்சியாளர்களுக்கு விருப்பு வெறுப்பு இல்லாத நேர்மையான சிந்தனை இருந்தாலே ஆண்டுக்கு சுமார் ரூ.1000 கோடி ரூபாய் அளவில் கூடுதல் வருமானம் பெருவதற்கு வாய்ப்பு இருக்கும்.
அதை தவிர்த்து சாமானிய மக்களை பாதிக்கின்ற விதத்தில் வரி உயர்வுகளை உயர்த்துவது தேவையற்ற ஒன்றாகும். இது சம்பந்தமாக மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை நேரில் சந்தித்து ஆதாரபூர்வமான விளக்க கடிதத்தை ஒன்றிரண்டு தினங்களுக்குள் அதிமுக சார்பில் அளிக்கப்படும். அதன் பிறகும் ஆளும் அரசு சரியான நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் துணைநிலை ஆளுநர் அவர்களை சந்தித்து உரிய மனு அளிக்கப்படும்-அன்பழகன்(அதிமுக மாநில செயலாளர்)தெரிவித்தார்.
English Summary
Petrol, diesel prices hiked AIADMK slams Congress