பிளாஸ்டிக் பயன்படுத்துவதை தவிர்க்க பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த பணிக்குழு அமைத்தது சென்னை மாநகராட்சி.!
Plastic usage awareness committee
பிளாஸ்டிக் பயன்படுத்துவதை தவிர்க்கும் பொருட்டு பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த சென்னை மாநகராட்சி ஆணையர் தலைமையில் பணிக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை தவிர்க்கவும், பொதுமக்களிடையே விழிப்புணர்வினை ஏற்படுத்திடவும் ஆணையாளர் அவர்கள் தலைமையில் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் ஒருமுறை பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்படும் பொருட்களான உணவுப்பொருட்களை கட்ட பயன்படுத்தும் பிளாஸ்டிக் தாள், பிளாஸ்டிக்காலான தெர்மாக்கோல் தட்டுகள், பிளாஸ்டிக் பூசப்பட்ட காகிதத் குவளைகள், பிளாஸ்டிக் குவளைகள், நீர் நிரப்ப பயன்படும் பைகள்/பொட்டலங்கள், பிளாஸ்டிக் தூக்கு பைகள், பிளாஸ்டிக் கொடிகள், பிளாஸ்டிக் விரிப்புகள், பிளாஸ்டிக் பூசப்பட்ட காகிதத் தட்டுகள், பிளாஸ்டிக் தேநீர் குவளைகள், பிளாஸ்டிக் உறிஞ்சு குழல்கள், பிளாஸ்டிக் பூசப்பட்ட பைகள், நெய்யாத பிளாஸ்டிக் பைகள் போன்ற 14 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது.
இவ்வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதிலாக வாழையிலை, பாக்குமர இலை, அலுமினியத்தாள், காகித சுருள், தாமரை இலை, கண்ணாடி/உலோகத்தால் ஆன குவளைகள், மூங்கில்/மரப்பொருட்கள், காகிதக் குழல்கள், துணி/காகிதம்/சணல் பைகள், காகித/துணி கொடிகள், பீங்கான் பாத்திரங்கள், மண் கரண்டிகள் மற்றும் மண் குவளைகள் போன்ற 12 வகையான பொருட்களை பயன்படுத்தலாம்.
சென்னை மாநகரை அழகுப்படுத்தவும், பசுமைப் பரப்பளவை அதிகரித்து சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், மாநகராட்சியின் சார்பில் மரக்கன்றுகள் நடுதல், தீவிர தூய்மைப் பணியின் கீழ் நீண்ட நாள் கழிவுகளை அகற்றுதல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் சுற்றுச்சூழலை பாதிக்கின்ற தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டினை தவிர்க்கும் வகையில் பெருநகர சென்னை மாநகராட்சியால் பொதுமக்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் விநியோகஸ்தர்களுக்கு பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டும், தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதமும் விதிக்கப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன்படி, சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கடந்த மாதம் 20-ஆம் தேதி முதல் ஏப்ரல் 3ஆம் தேதி வரை 17,582 வணிக நிறுவனங்கள் மற்றும் அங்காடிகளில் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வுகளில் 6.74 மெட்ரிக் டன் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.11,19,700 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை விதிகள் 2016 மற்றும் பிளாஸ்டிக் தடை குறித்து அரசால் வெளியிடப்பட்ட அறிவிப்பினை தீவிரமாக நடைமுறைப்படுத்தவும், தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொள்ளவும், பிளாஸ்டிக் பொருட்களை முறையாக பிரித்து, மறுசுழற்சி செய்யவும் மற்றும் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும் சென்னை மாநகராட்சி ஆணையாளர் அவர்கள் தலைமையில் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
இக்குழுவில் துணை ஆணையாளர்கள், காவல் இணை ஆணையாளர், மாநகர நல அலுவலர், மாநகர வருவாய் அலுவலர், திடக்கழிவு மேலாண்மை மேற்பார்வை பொறியாளர், மீன்வளத்துறை உதவி இயக்குநர், கல்லூரி கல்வி மண்டல இயக்குநர், மண்டல உணவு பாதுகாப்பு மற்றும் நுகர்வோர் துறை இயக்குநர், பொது சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை இணை இயக்குநர், சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், தொழிலாளர் நலத்துறை இணை ஆணையாளர், மாவட்ட தொழில் மைய மண்டல இயக்குநர், பெருநகர சென்னை மாநகராட்சி மக்கள் தொடர்பு அலுவலர், சென்னை மாவட்டம், அம்பத்தூர் மற்றும் அரும்பாக்கம் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய சுற்றுச்சூழல் பொறியாளர்கள் உட்பட 19 உறுப்பினர்கள் இடம் பெற்றுள்ளனர்.
எனவே, வணிக நிறுவனங்கள், சிறு அங்காடிகள் மற்றும் பொதுமக்கள் அரசால் தடைசெய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை தவிர்த்து, பிளாஸ்டிக் மாசில்லா சென்னையை உருவாக்க பொதுமக்கள் அனைவரும் தங்களது முழு ஒத்துழைப்பை அளிக்கவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Plastic usage awareness committee