இதற்கவே தமிழக அரசு தலை குனிய வேண்டும்: அம்பலமான உண்மை - கொந்தளிக்கும் அன்புமணி இராமதாஸ்!
PMK Anbumani Ramadoss Condemn to DMK Govt MK Stalin TN Police isseu
மத்தியக் காவல் படைகள் மற்றும் பிற மாநிலங்களின் காவலர்களுடன் ஒப்பிடும் போது தமிழ்நாட்டில் காவலர்களுக்கு மிகக்குறைந்த ஊதியம் மட்டும் தான் வழங்கப்படுகிறது என்றும், அதை உடனடியாக உயர்த்தி வழங்க வேண்டும் என்றும் தமிழக அரசால் அமைக்கப்பட்ட ஐந்தாவது காவல் ஆணையம் பரிந்துரைத்திருக்கிறது.
ஆணையத்தின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு 50 நாட்களுக்கும் மேல் ஆகும் நிலையில், அதன் பரிந்துரைகளை செயல்படுத்த தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த அவரின் அறிக்கையில், "தமிழ்நாடு காவல்துறையில் மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்து அரசுக்கு பரிந்துரை வழங்குவதற்காக கடந்த 2022-ஆம் ஆண்டு பிப்ரவரி 16-ஆம் நாள் சென்னை உயர்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி சி.டி.செல்வம் தலைமையில் ஐந்தாம் காவல் ஆணையம் அமைக்கப்பட்டிருந்தது. அதன் பின் 3 ஆண்டுகள் நிறைவடைந்து விட்ட நிலையில், கடந்த ஜனவரி மாதம் 3-ஆம் தேதி தான் ஆணையத்தின் அறிக்கை தமிழக அரசிடம் தாக்கல் செய்யப்பட்டது.
மத்தியக் காவல்படை, பிற மாநில காவல் படைகள் ஆகியவற்றுடன் ஒப்பிடும் போது தமிழ்நாட்டில் மிகக் குறைவாக இரண்டாம் நிலைக் காவலர்களுக்கு அடிப்படை ஊதியமாக ரூ.18,200 - ரூ.52,900 மட்டுமே வழங்கப்படுகிறது. இதை குறைந்தபட்சம் ரூ.21,700 - 69,100 என்ற நிலைக்கு உயர்த்த வேண்டும்; காவலர் தேர்வின் போது, ஒன்றாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை தமிழ்வழியில் படித்தவர்களுக்கு மட்டும் தான் தமிழ்வழியில் படித்தவர்களுக்கான 20% இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்; காவலர்களின் மன அழுத்தத்தை போக்குவதற்கான காவலர் நலத் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பரிந்துரைகளை காவல் ஆணையம் வழங்கியுள்ளது. அவை அனைத்தும் மிகவும் நியாயமான பரிந்துரைகள் ஆகும்.
காவல் ஆணையத்தின் அறிக்கை கடந்த ஜனவரி 3-ஆம் நாள் அரசிடம் தாக்கல் செய்யப்பட்டது. அதன்பின் இன்று வரை 54 நாட்கள் நிறைவடைந்து விட்டன. காவல் ஆணையத்தின் பரிந்துரைகளை செயல்படுத்துவது குறித்து இந்தக் கால இடைவெளியில் உறுதியான மற்றும் தெளிவான முடிவுகளை தமிழக அரசு எடுத்திருக்க வேண்டும். ஆனால், ஆணையத்தின் அறிக்கையை பரிசீலனைக்குக் கூட தமிழக அரசு இன்னும் எடுத்துக் கொள்ளவில்லை. காவல்துறையினரின் நலனில் தமிழக அரசுக்கு அக்கறை இல்லை என்பதையே இது காட்டுகிறது.
தமிழ்நாட்டில் ஐந்தாம் காவல் ஆணையம் அமைக்கப்பட்ட போது, அதன் பதவிக்காலம் 6 மாதங்கள் என்று தான் அறிவிக்கப்பட்டிருந்து. ஆனால், அடுத்தடுத்து கால நீட்டிப்பு வழங்கப்பட்டு, மூன்றாம் ஆண்டு நிறைவடையப் போகும் தருணத்தில் தான் ஆணையத்தின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. காவல் ஆணையம் அதன் அறிக்கையை தாக்கல் செய்வதற்கே இரண்டரை ஆண்டுகள் தாமதமாகி விட்ட நிலையில், அதன் பரிந்துரைகளை செயல்படுத்துவதில் தமிழக அரசு ஆர்வம் காட்ட வேண்டும். ஆனால், தமிழக அரசோ, ஆணையத்தின் அறிக்கையை கிடப்பில் போடுவதற்கு தான் ஆர்வம் காட்டுகிறது. அப்படியானால், ஐந்தாம் காவல் ஆணையம் எதற்காக அமைக்கப்பட்டிருக்க வேண்டும்? இது காவலர்களுக்கு இழைக்கப்படும் நம்பிக்கைத் துரோகம் இல்லையா?
இந்தியாவின் சிறந்த காவலதுறை தமிழக காவல்துறை தான் என்று தமிழக அரசு மார்தட்டிக் கொள்கிறது. ஆனால், இந்தியாவின் பெரும்பான்மையான மாநிலங்களை விட தமிழ்நாட்டில் காவலர்களுக்கு மிகக் குறைவான ஊதியம் மட்டும் தான் வழங்கப்படுகிறது. தமிழக காவல்துறையை மிகச் சிறப்பாக பராமரிக்கிறோம் என்ற பொய்யானத் தோற்றத்தை ஏற்படுத்தி வரும் தமிழ்நாடு அரசு அதற்காக தலைகுனிய வேண்டும்.
இனியும் வெற்று வசனங்களை பேசிக் கொண்டு இருக்காமல், காவலர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட காவல் ஆணையத்தின் பரிந்துரைகளை தமிழக அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும்" என்று அன்புமணி இராமதாஸ்தெரிவித்துள்ளார்.
English Summary
PMK Anbumani Ramadoss Condemn to DMK Govt MK Stalin TN Police isseu