மத்திய அரசின் செயல் சமூகநீதிக்கு எதிரானது - கடும் கண்டனம் தெரிவித்த டாக்டர் இராமதாஸ்! - Seithipunal
Seithipunal


மத்திய அரசு நிர்வாகத்தில் இணை செயலாளர்கள், இயக்குனர்கள் உள்ளிட்ட பல்வேறு நிலையிலான 45 அதிகாரிகளை நேரடியாக  நியமனம் செய்வதற்கான விளம்பர அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

மத்திய அரசின் உயர்பதவிகளுக்கு தகுதியான ஆட்களை நியமிப்பதற்காக கடைபிடிக்கப்பட்டு வரும் நடைமுறைகளை சீர்குலைக்கும் நோக்கத்துடன் மத்திய அரசு அறிமுகம் செய்துள்ள இந்த அறிவிப்பு கண்டிக்கத்தக்கது என்று, பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், "2018-ஆம் ஆண்டில்  இணைச்செயலாளர் நிலையில் 10 அதிகாரிகளை இந்த முறையில் நியமிக்க அறிவிப்பு வெளியிடப்பட்ட போதே அதை பாட்டாளி மக்கள் கட்சி கடுமையாக கண்டித்தது.  ஆனால், அதையும் மீறி அப்போது அதிகாரிகள் நியமிக்கப்பட்ட நிலையில், இப்போது மீண்டும்  அதே முறையில் 45 அதிகாரிகளை நியமிப்பதை எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது.

மத்திய அரசின் உயர்பதவிகளில், பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களை  நேரடியாக நியமிக்கும் முறையில் இட ஒதுக்கீடு கடைபிடிக்கப்படாது. அதனால், இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கு இந்த பதவிகள் கிடைக்காத நிலை ஏற்படும். அதுமட்டுமின்றி, ஏற்கனவே பல்வேறு நிலையிலான பணிகளில் உள்ள பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த அதிகாரிகளின் பதவி உயர்வு வாய்ப்புகளும் பாதிக்கப்படும். 

அரசு நிர்வாகத்தின் உயர்பதவிகளில் வல்லுனர்களை நேரடியாக நியமிக்கும் முறை முந்தைய காங்கிரஸ்  ஆட்சிக்காலத்தில் தான் கொண்டு வந்தது என்று கூறி, அதை இன்றைய அரசு கடந்து செல்ல முடியாது.   நீட் தேர்வு உள்ளிட்ட சமூக நீதிக்கு எதிரான பல திட்டங்கள் காங்கிரஸ் ஆட்சியில் தான் கொண்டு வரப்பட்டன. ஆனால், அதையெல்லாம் இன்றைய அரசு அப்படியே பின்பற்ற வேண்டிய கட்டாயம் என்ன?  சமூகநீதிக்கு  எதிரான எந்த முடிவாக இருந்தாலும், அதை எந்த அரசு எடுத்திருந்தாலும் அதை ரத்து செய்வது தான் சமூகநீதி அரசுக்கு அழகாகும்.  தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுக்கு சமூகநீதியில் அக்கறை இருந்தால், நேரடி நியமன முறையை கைவிட வேண்டும்.

இணைச் செயலாளர்கள் நிலையிலான பதவிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் தனியார் நிறுவனங்களின் அதிகாரிகளை நியமிக்க இந்திய அரசியலமைப்புச் சட்டம் அனுமதிக்கவில்லை. இ.ஆ.ப. இ.கா.ப. போன்ற குடிமைப் பணிகளைச் சேர்ந்தவர்கள் மட்டுமே நியமிக்கப்பட வேண்டும். இந்திய அரசியலமைப்புச் சட்டப் பிரிவுகளின்படி குடிமைப்பணி அதிகாரிகளை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் மட்டுமே தேர்வு செய்ய முடியும். 

ஆனால், இப்போது மத்திய அரசு அறிவித்துள்ள விளம்பரத்தில் 45  அதிகாரிகளை மத்திய அரசால் நியமிக்கப்படும் தேர்வுக்குழு தான் தேர்ந்தெடுக்கும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த  முறையில்  செய்யப்படும் முறை வெளிப்படையாக இருக்காது.

எனவே, மத்திய அரசின் பல்வேறு துறைகளில் இணைச் செயலாளர், இயக்குனர்கள்  உள்ளிட்ட நிலைகளில்  தனியார் நிறுவன அதிகாரிகளை நேரடியாக நியமிக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும். மாறாக,  குடிமைப்பணிகளுக்கான அனைத்து நியமனங்களும் இட ஒதுக்கீட்டு முறையை பின்பற்றி  மத்திய அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம்  மூலமாகவே செய்யப்படுவதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும்" என்று மருத்துவர் இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PMK Dr Ramadoss Condemn to Lateral Entry Central Govt PMModi BJP


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->